’60 விழுக்காடு அரசு ஊழியர்கள் சொந்த வீடுகளை பெற முடியாது’

நாடு முழுவதும் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் அரசாங்க ஊழியர்களில்  60 விழுக்காட்டினர் மாதம் ஒன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாகவே சம்பளம் பெறுவதால் சொந்த வீடுகளை வாங்க இயலாத நிலையில் இருக்கின்றனர் என்ற தகவலை கியூபாக்ஸ் வெளியிட்டுள்ளது.

அந்தத் தகவலை  வெளியிட்ட அதன் நிதிச் செயலாளர் ஜப்பார் மான்சோர், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை ஒரு விழுக்காடாகக் குறைப்பது, அவர்களுடைய வருமானத்தை உயர்த்துவது உட்பட அந்தப் பிரச்னையைச் சமாளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கா விட்டால் அந்த நிலை தொடரும் என எச்சரித்தார்.

அரசு ஊழியர்களுக்குக் கிடைக்கும் வருமானம் கடுமையான வறுமை நிலையில் உள்ளவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்களில் குறைந்த விலை வீடுகளை வாங்கவும் அல்லது வாடகைக்கு குடியிருக்கவும் மட்டுமே போதுமானதாக இருக்கக் கூடிய சாத்தியத்தையும் அவர் நிராகரிக்கவில்லை.

இன்னும் சொந்த வீடுகளை வைத்திருக்காத அரசு ஊழியர்களை அடையாளம் காணும் முயற்சியை கியூபாக்ஸ் நாடு முழுவதும் தொடங்கியுள்ளதாகவும் ஜப்பார் தெரிவித்தார். அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்கு வழிகாட்டியாக அந்த புள்ளி விவரங்கள் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.

இதர விஷயங்களுடன் அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள விகிதங்களையும் அலவன்ஸ்களையும் மறு ஆய்வு செய்ய மார்ச் 8ம் தேதி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த சிறப்பு ஆணையத்தை அமைப்பதைத் துரிதப்படுத்துமாறும் அவர் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

பெர்னாமா