பெட்டாலிங் ஜெயா, பண்டார் உத்தாமாவில் அமைந்திருக்கும் எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு அப்பகுதி நில மேம்பாட்டாளர் வழங்கிய நிலத்தை பள்ளிகே மீட்கும் வரையில் உண்ணாவிரதம் இருக்கும் நடவடிக்கையை தமிழ்ப்பள்ளி நில மீட்பு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த எழுவர் மேற்கொண்டுள்ளனர்.
அக்குழுவைச் சேர்ந்த தில்லை அம்பலம், பாலகுமரன், பழனிவேலன், லோகநாதன், சுரேஷ்குமார், தமிழ்ராஜன் மற்றும் ராமன் நாமலிங்கம் ஆகியோர் இவ்வுண்ணாவிரதப் போராட்டத்தை கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவில் தொடங்கியுள்ளனர்.
ரிபிலேக்ஸ் (Return Effingham Land Action Team) என்று அழைக்கப்படும் அக்குழுவின் தலைவர் மணிவண்ணன் எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு அந்நிலம் திருப்பிக்கொடுக்கப்படும் வரையில் இந்த உண்ணாவிரதம் நீடிக்கும் என்று கூறினார்.
இக்குழுவினர் சம்பந்தப்பட்ட நிலத்தை தமிழ்ப்பள்ளிக்கு திரும்பக்கொடுக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைகயை வலியுறுத்தி ஒவ்வொரு சனிக்கிழமையும் கடந்த 14 வாரங்களாக மெழுகுவத்தி விழிப்பு கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்ட நிலத்தில் 3 ஏக்கர் மஇகாவுக்கு கைமாறியுள்ளதாகக் கூறும் அக்குழுவினர் அந்நிலம் பள்ளிக்கு திருப்பிக் கொடுக்கப்படும் வரையில் அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று மணிவண்ணன் கூறினார்.
ஒரு தமிழ்ப்பள்ளியின் நிலம் மஇகாவுக்கு கைமாறியிருப்பதை அனுமதிக்க முடியாது என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
முறைப்படி தொடங்கிய இந்த உண்ணாவிரத நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர். சிவராசா, எம். மனோகரன், நூருல் இஸ்ஸா ஆகியோர் பங்கேற்றனர்.
இக்குழுவின் போராட்டம் வெற்றி பெறும் வரை அவர்களுக்கு ஆதரவு வழங்குவோம் என்று அந்நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.