WWW1 என்ற எண்ணுக்கு ரிம0.5 மில்லியன் கொடுத்தார் ஜோகூர் சுல்தான்

மலேசிய வரலாற்றில் மிக உயர்ந்த விலை கொடுத்து வாகனப் பதிவு எண்ணை வாங்கியிருப்பவர் ஜோகூர் சுல்தான் என்று சாலைப் போக்குவரத்துத் துறை(ஆர்டிடி) தெரிவித்துள்ளது.  

பலரும் பெற விரும்பிய WWW1 என்ற எண்ணை சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மர்ஹோம் சுல்தான் இஸ்கண்டார் ரிம520,000 கொடுத்து வாங்கியுள்ளார்.

விலை உயர்ந்த வாகன எண் பட்டைகளை வாங்கியவர்களின் பட்டியலை ஆர்டிடி அதன் வலைத்தளத்தில் இன்று வெளியிட்டுள்ளது.அவர்களில் நம் பேரரசரும்  ஒருவர். அவர், WWW5 என்ற எண்ணுக்கு ரிம220,000 விலை கொடுத்துள்ளார்.

WWW1-க்கு முன் மிக அதிகமான விலைக்குப் போன எண் MCA 1.அதற்குக் கொடுக்கப்பட்ட விலை ரிம300,100.

ஜோகூர் சுல்தான் கார் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவரிடம் பழைய புதிய கார்கள் நிறைய உள்ளன.

ஜோகூர் ரிம0.5மில்லியன் கொடுத்து WWW1 எண்ணை வாங்கியதை ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் இட்ரிசும் டிவிட்டரில் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஆனால், அவருக்குப் பிடித்தது அவரின் தாத்தா வைத்திருந்த வாகன எண் பட்டைதான். “அது ஜோகூர் என்று மட்டும் எழுதப்பட்டிருக்கும்.மிக எளிமையானது”, என்றார்.

தங்களுக்கு விருப்பமான வாகனப் பதிவுஎண்களை வாங்குவதற்கு  ஆர்வம் கொண்டோர் எப்போதுமே இருக்கத்தான் செய்வார்கள்.ஆனால், இதற்குமுன் இல்லாத அளவுக்கு WWW என்ற தொடர்எண் கொண்ட வாகனப் பட்டைகளை வாங்குவதற்குத்தான் மிகப் பலர் ஆர்வம் காட்டினார்கள். மொத்தம் 18.243பேர் அதற்கு விண்ணப்பித்துக் கொண்டதாக போக்குவரத்து அமைச்சர் கொங் சோ ஹா கூறினார்.