பிகேஆர்: தேர்தல் வேட்பாளர்களை வடி கட்டுவதற்கு உதவி தேவை இல்லை

சாத்தியமான தேர்தல் வேட்பாளர்களை ஆய்வு செய்வதற்கு உதவி செய்ய எம்ஏசிசி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முன் வந்ததை பிகேஆர் நிராகரித்துள்ளது.

“வேட்பாளர் தேர்வு கட்சியின் தனிப்பட்ட உரிமை ஆகும். அது எங்கள் வியூகத்தின் ஒரு பகுதி. நாங்கள் அதனை வெளியிட்டால் எம்ஏசிசி அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தும். அப்புறம் எங்களுக்கு வேட்பாளர்களே இருக்க மாட்டார்கள்,” என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் இன்று நிருபர்களிடம் கூறினார்.

ஒர் அரசியல் கட்சிக்குள் கூட இறுதி வேட்பாளர் யார் என்பது “குறிப்பிட்ட காலம் வரையில்” தெரியாது என்றார் அவர்.

கடந்த வியாழக் கிழமை எம்ஏசிசி துணைத் தலைமை ஆணையர் முகமட் சுக்ரி அப்துல், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய வேட்பாளர்களை ஆய்வு செய்வதற்கு எழுத்துப்பூர்வமான வேண்டுகோளை சமர்பிப்பதற்கு வாய்ப்பளிக்க முன் வந்தார்.

அந்த வேண்டுகோட்கள் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்றும் ஆய்வுகளும் முடிவுகளும் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்களுக்குச் சமர்பிக்கப்படும் என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.

எம்ஏசிசி உதவி செய்வதாக கூறுவது அபத்தமானது என வருணித்த ராபிஸி, அந்த அமைப்பு அதற்குப் பதில் நாட்டை சூழ்ந்துள்ள உயர்ந்த நிலையிலான ஊழல்களைத் தீர்க்க வேண்டும் என்றார்.

“பெரிய ஊழல்களை தீர்ப்பதில் எம்ஏசிசி கவனம் செலுத்த வேண்டும். இது நாள் வரையில் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட ஊழல் குறித்து நான் அதனிடமிருந்து எதுவும் கேள்விப்படவில்லை,” என்றும் ராபிஸி சொன்னார்.

“நேர்மையான, அனைத்துலகத் தரங்களுக்கு இணங்க எங்கள் வேட்பாளர்களை ஆய்வு செய்துள்ளோம் என்பதை மக்களுக்கு நிரூபிப்பது ஒவ்வொரு அரசியல் கட்சியின் கடமையாகும்.”

தேர்தல் அணுக்கமாக வரும் போது உறுதி செய்யப்படும் வேட்பாளர்கள் தங்களது சொத்துக்களையும் அறிவிக்க வேண்டும் என கட்சித் தலைமைத்துவம் கேட்டுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.