பினாங்கு மாநில அரசாங்கத்துக்கு எதிராகவும் முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு எதிராகவும் மே 10ம் தேதி ஆர்ப்பாட்டம் செய்த போது திறந்த வெளியில் எரித்ததற்காகவும் பல வீதிகளை அழுக்காக்கியதற்காகவும் பெர்க்காசா மீது பினாங்குத் தீவு நகராட்சி மன்றம் நடவடிக்கை எடுக்கவிருக்கிறது.
அன்றைய தினம் லிம் குவான் எங் எதிர்ப்பு துண்டுப் பிரசுரங்களை பெர்க்காசா உறுப்பினர்கள் வீசியதாக ஜாலான் பின்ஹோர்ன், ஜாலான் சுங்கை, ஜாலான் டத்தோ கிராமாட், ஜாலான் ரியா ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த நகராட்சி மன்ற உறுப்பினரான ஒங் ஆ தியோங் கூறினார்.
அதற்கு முன்னதாக அந்தக் குழு மலாய் சமூகத்தின் அவலங்களை லிம் அலட்சியம் செய்வதாகக் கூறிக் கொண்டு ஜாலான் பின்ஹோர்னில் உள்ள லிம்-மின் தனிப்பட்ட வீட்டுக்கு வெளியில் அவரது ‘மரணத்தைக் குறிக்கும் வகையில்’ இந்து முறைப்படி “நல்லடக்கச் சடங்குகளை” நடத்தியது.
குப்பைகள் வீசப்பட்ட ஒவ்வொரு தெருவுக்கும் நகராட்சி மன்றத்தின் சாலைகள், வடிகால், கட்டிடங்கள் மீதான துணைச் சட்டங்களின் கீழ் தலா 250 ரிங்கிட் அபராதத்தை பெர்க்காசா எதிர்நோக்குவதாக ஒங் மேலும் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று பெர்க்காசா கொம்தாரில் திறந்த வெளியில் எரித்ததாக அதன் மீது சுற்றுச்சூழல் துறையிடமும் நகராட்சி மன்றம் புகார் செய்யும்.
பெர்சே இயக்கத்தை நோக்கமாகக் கொண்ட அந்த ஆர்ப்பாட்டத்தின் போது அந்த இயக்கத்தின் பல மஞ்சள் நிற சட்டைகளுக்கு எரியூட்டப்பட்டன.
பெர்க்காசாவின் நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கு சேதத்தை ஏற்படுத்துவதோடு பொது மக்களுக்கும் ஆபத்தைக் கொண்டு வருவதாகவும் ஒங் சொன்னார்.
திறந்த வெளியில் எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் 500,000 ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படலம்.
“சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கா விட்டால் அத்தகைய அடாவடித்தனமான, ஆபத்தான நடத்தைகள் தொடரும்,” என ஒங் இன்று நிருபர்களிடம் கூறினார்.
“இது போன்ற நடவடிக்கைகளில் அந்தக் குழு ஈடுபட்டிருந்த போதிலும் சுற்றுச்சூழல் துறை, தீயணைப்புத் துறை, போலீஸ் ஆகிய தரப்புக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு வியப்பை அளித்துள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.