அரசு ஊழியர்களில் 60 விழுக்காட்டினர் சொந்த வீடுகளை வாங்க இயலாத நிலையில் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் மக்களை மேம்படுத்துவதற்கு நீண்ட காலத் திட்டங்களை அமலாக்க பிஎன் தவறி விட்டதற்கு நல்ல எடுத்துக்காட்டு என பிகேஆர் கூறுகிறது.
“முதல் கண்ணோட்டத்தில் மக்களுக்கு நட்புறவானதாகவும் கவர்ச்சிகரமாகவும் தோன்றும் குறுகிய காலக் கொள்கைகளை வகுக்கும் பிஎன் அரசாங்கத்தின் அண்மைய போக்கை பிகேஆர் கடுமையாகக் கருதுகிறது. அவை உண்மையில் தற்காலிகமானவை. முழுமையான தீர்வுகளைத் தவறி விட்டன.”
“கியூபாக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் பிஎன் அரசாங்கம் நீண்ட கால நடவடிக்கைகளை குறிப்பாக தரமான வீடமைப்பு விஷயத்தில் எடுக்கத் தவறி விட்டதற்கு இன்னொரு ஆதாரம்,” என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறினார்.
நாடு முழுவதும் குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் மாதம் ஒன்றுக்கு 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக ஊதியம் பெறும் அரசு ஊழியர்களில் 60 விழுக்காட்டினர் சொந்த வீடுகளை வாங்க முடியாத நிலையில் இருப்பதாக கியூபாக்ஸ் நேற்று வெளியிட்ட தகவல் பற்றி அவர் கருத்துரைத்தார்.
“பல தசாப்தங்களுக்கு வேலை செய்த பின்னரும் மாத வருமானம் 3,000 ரிங்கிட்டுக்கும் குறைவாக இருக்கும் போது கீழ் நிலையில் உள்ள அரசு ஊழியர்கள் சொந்த வீடுகளை வாங்க இயலாத நிலையில் இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை,” என அந்த லெம்பா பந்தாய் எம்பி சொன்னார்.
மார்ச் 8ம் தேதி பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்த சம்பள மறு ஆய்வு ஆணையம் பற்றி இது வரை எந்தச் செய்தியும் இல்லாததும் ‘கவலை அளிப்பதாகவும்’ அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கம் அதற்குப் பதில் வெற்று வாக்குறுதிகளைக் கொண்ட அறிக்கைகளை அடுத்தடுத்து வெளியிடுவதிலேயே அக்கறை காட்டுவதாக நுருல் இஸ்ஸா வருத்தத்துடன் கூறினார். தோல்வி கண்ட எம்ஏஎஸ்-ஏர் ஏசியா இனைப்பு, பெரும்பான்மை மக்களுக்கு நன்மை தராத பொருளதார உருமாற்றத் திட்டங்கள், Felda Global Ventures Holdings பங்குப் பட்டியலில் சேர்க்கப்படுவதால் கிடைக்கும் அதிர்ஷ்டம் ஆகியவை பற்றிய அறிக்கைகளும் அவற்றுள் அடங்கும்.