நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்தலை நடத்தக் கூடாது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கருதுகிறார்.
முன்னைய தலைவர் அப்துல்லா அகமட் படாவியிடமிருந்து ‘பலவீனமான’ பிஎன்-னை நஜிப் பெற்றதால் ஆதரவை வலுப்படுத்த தேர்தலை தாமதப்படுத்துவது அவசியம் என அவர் சொன்னார்.
“பலவீனமாக இருப்பதால் அவர் குறை கூறல்களுக்குப் பதில் சொல்ல வேண்டியுள்ளது. நீங்கள் இத்தகைய பிரச்னையை எதிர்நோக்கும் போது நீங்கள் எதைச் செய்தாலும் போதுமானதாக இருக்காது,” என்றார் அவர்.
அடுத்த ஐந்து மாதங்களில் இந்த ஆண்டு முடிவதற்குள் நஜிப் தேர்தலை நடத்துவதற்கு நல்ல தருணம் என மகாதீர் மேலும் குறிப்பிட்டார்.
அவர் இன்று ஒளிபரப்பான பூளும்பெர்க் பேட்டியில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவை வலுப்படுத்துவதற்குக் குறிப்பாக சீன சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு பிரதமர் தேர்தலைத் தாமதப்படுத்த வேண்டும் என அதே பூளும்பெர்க் நிறுவனத்துக்கு பிப்ரவரி மாதம் வழங்கிய பேட்டியிலும் மகாதீர் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாமல் சாதாரணப் பெரும்பான்மையை நஜிப் பெற முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
“உங்களுக்கு நேரம் இருந்தால் ஆதரவை வலுப்படுத்த அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்,” என்றார் மகாதீர்.
யூரோ நாணய மண்டல நெருக்கடி
யூரோ நாணய மண்டல நெருக்கடியின் தாக்கத்தினால் மலேசியாவும் பாதிக்கப்படும் என்பதால் நோன்புப் பெருநாளுக்கு பின்னர் தேர்தலை நடத்துவது பிஎன்-னுக்கு நல்லதல்ல எனக் கூறப்படுவதை மகாதீர் நிராகரித்தார் .
ஒரளவு ஆபத்து உண்டு என்றாலும் நோன்புப் பெருநாளைக்கு பின்னர் ‘எந்த நேரத்திலும்’ தேர்தலை நடத்தலாம் என அவர் வலியுறுத்தினார்.