எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு நில மேம்பாட்டாளர் வழங்கிய 6 ஏக்கர் நிலத்தில் 3 ஏக்கரை மஇகா பறித்துக்கொண்டு விட்டது. அந்த நிலம் பள்ளிக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். அதனை அடைவதுதான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் நோக்கம் என்று அதன் ஏற்பாட்டாளர் மணிவண்ணன் கூறினார்.
கடந்த 53 மணிநேரமாக நடந்து வரும் இந்த உண்ணாவிரதம் இப்பிரச்னையை நாட்டு மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மஇகாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. மஇகா இதற்கான ஒரு முடிவான எடுக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை தொடங்கிய உண்ணாவிரதத்தில் எழுவர் பங்கேற்றனர். இருபத்து நான்கு மணி நேர உண்ணாவிரத்திற்குப் பின்னர் இருவர் விலகிக்கொண்டனர்.
நாதன், லோகநாதன், பழனிவேல், மைக்கல் தமிழரசன் மற்றும் பாலகுமார் ஆகிய ஐவரும் உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றனர்.
உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருப்பவர்களை டாக்டர் சீத்தாராம் கவனித்து வருகிறார். பிற்பகல் மணி 1.00 அளவில் அவர்களைச் சோசித்த டாக்டர் சீத்தாரம் உண்ணாவிரம் அனுசரிப்பவர்களில் ஒருவருக்கு அழுத்தம் சற்று கூடுதலாக இருக்கிறது. மற்றவர்களின் உடல்நிலை சீராக இருக்கிறது என்று கூறிய அவர், பிற்பகல் மணி 4 அளவில் மீண்டும் அவர்கள் சோதிக்கப்படுவர் என்றார்.
அவர்கள் இன்னும் ஒரு நாளைக்கு உண்ணாவிரதத்தை தொடர முடியும் என்றும் அவர் கூறினார்.
“உண்ணாவிரதத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் தங்களுடைய சுயவிருப்பத்தின் பேரில் அதனை மேற்கொண்டுள்ளனர். அவர்களுடையக் குடும்பத்தினர் அவர்களின் உடல்நிலை குறித்து கவலை கொண்டுள்ளனர். அது நியாயமான ஒரு நிலையே என்று கூறிய இந்த உண்ணாவிரதத்தை முன்நின்று நடத்தும் அமைப்பான ரிபிளேக்ஸ் குழுவின் தலைவர் மணிவண்ணன், தாங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள உறுதியளித்துள்ளோம் என்றார்.
மஇகா நிலத்தை திருப்பித் தந்தேயாக வேண்டும்
இந்திய மக்களின் நலன் பேணும் கட்சி என்று கூறிக்கொள்ளும் மஇகா மக்களுக்கு உதவுவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மேம்பாட்டாளர் 6 ஏக்கர் நிலத்தை முதலில் தமிழ்ப்பள்ளிக்குத்தான் அளித்தார். அது அவரின் சட்டப்பூர்வமான கடமை. அவ்வாறு அளிக்கப்பட்ட நிலத்தில் 3 ஏக்கரை மஇகா எடுத்துக்கொண்டது நன்னெறியற்ற, நியாயமற்ற செயல் என்று மணிவண்ணன் மேலும் கூறினார்.
நாங்கள் இந்தக் கோரிக்கையை உண்ணாவிரதத்தின் வழி அமைதியாக முன்வைப்பது மஇகாவுக்கு அதன் கடமையை உணர்த்த வேண்டும் என்பதுடன் அக்கட்சியின் தலைவர் ஜி. பழனிவேல் தங்களுடையை கோரிக்கையை ஏற்று தமிழ்ப்பள்ளி எப்பிங்ஹாமுக்கு சேர வேண்டிய நிலத்தை அதனிடம் உடனடியாக கொடுக்க வேண்டும் என்பதாகும்.
உண்ணாவிரதம் முடிவுற்றாலும் எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு நிலம் திருப்பிகொடுக்கப்படும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும்”, என்று மணிவண்ணன் திட்டவட்டமாக கூறினார்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் ஐவரும் சற்று சோர்வாக காணப்பட்டாலும், தங்களுடைய ஈடுபாட்டில் தீவிரமாக இருக்கின்றனர். நிலம் எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு உரியது; மஇகாவுக்கு அல்ல என்று அவர்கள் உணர்வுப்பூர்வமாக கூறினர்.
பிற்பகல் மணி 3.30 அளவில் கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் எம்.சரவணன் உண்ணாவிரதம் அனுசரிப்பவர்களைச் சந்திக்க வருவதாக கூறப்பட்டது.