எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்திற்கு தீர்வா?

பெட்டாலிங் ஜெயா, எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு ஏக்கர் நிலத்தில் மூன்று ஏக்கரை மஇகா கைப்பற்றிக் கொண்டது. அந்நிலத்தை மஇகா திருப்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து எழுவர் கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ்சில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். (படங்கள்) (காணொளி)

இன்று பிற்பகல் மணி 5.00 க்கு உண்ணாவிரத போராட்டவாதிகளைச் சந்தித்து பேசுவதற்காக கூட்டரசு பிரதேச துணை அமைச்சர் எம். சரவணன் அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த இடத்திற்கு வருகையளித்தார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நாதன், லோகநாதன், பழனிவேல், மைக்கல் தமிழரசன் மற்றும் பாலகுமார் ஆகிய ஐவருடன் துணை அமைச்சர் சரவணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அந்நேரத்தில் அவர்களுடன் சுபாங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசாவும் உடனிருந்தார். டிஎபி செனட்டர் எஸ். இராமகிருஷ்ணனும் அங்கிருந்தார்.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த அப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை அமைச்சர் எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளி நில விவகாரம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இருப்பினும் இவ்விவகாரத்திற்கு ஒரு தீர்வு காணும் நோக்கத்தோடு அதற்கான ஓர் “அடித்தளம்” இன்றைய பேச்சுவார்த்தையின் மூலம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேற்கொண்டு விளக்கம் அளித்த ஆர். சிவராசா ஏற்பட்டுள்ள கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் உண்ணாவிரதத்தில் ஈடுபள்ளவர்களின் சம்மதத்தோடு இந்நில விவகாரத்தைத் தீர்க்கும் நோக்கில் இதுவரையில் கூறப்பட்டு வந்த குற்றச்சாட்டுகள் – மஇகா நிலத்தைத் திருடி விட்டது போன்றவை – இதற்கு தீர்வு காணப்படும் வரையில் மீண்டும் கூறப்படாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூறினார்.

மூன்று ஏக்கர் நிலம் எப்பிங்ஹாம் பள்ளிக்கு கொடுக்கப்படும்

இன்று நடந்த பேச்சு வார்த்தையின் அடிப்படையில் நிலம் சம்பந்தமாக  ஏற்பட்டுள்ள இணக்கத்தை தாம் கட்சி தலைவர் ஜி. பழனிவேல் மற்றும் மத்திய செயலவை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப் போவதாக துணை அமைச்சர் கூறினார்.

இதனிடையில், இந்நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இரு தரப்பினராலும் வெளியிடப்பட்டும் என்று எம். சரவணன் கூறியதை ஆர். சிவராசா ஆமோதித்தார்.

இந்நில விவகாரத்தில் தீர்வு கண்டு விட்டதாக கருதக்கூடாது என்று கூறிய துணை அமைச்சர், “தீர்வு காண்பதற்கான மனோநிலையை அடைந்துள்ளோம். எந்த ரூபத்திலாவது ஒரு மாற்றுவழி காண வேண்டும் என்பதைக் கொள்கை அளவில் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளோம்”, என்றார்.

இன்று கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் எம். சரவணன், ஆர். சிவராசா மற்றும் ஐந்து உண்ணாவிர போராட்டவாதிகளுக்கிடையில் நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக ஏற்றப்பட்ட இணக்கத்தை இரத்தினச் சுறுக்கமாக கூறுமாறு ஆர்.சிவராசாவிடம் கேட்டபோது, “அவர்கள் (மஇகா) ஹோஸ்டல் கட்டுவதற்கான மாற்று நிலம் குறித்து சிலாங்கூர் மந்திரி புசாரிடம் பேசப்படும். அதன் பின்னர், அந்த மூன்று ஏக்கர் நிலம் எப்பிங்ஹாம் பள்ளியிடம் கொடுக்கப்படும். அந்த நிலத்திற்கு மஇகா கட்டியிருந்த ‘பிரீமியம்’ புதிய நிலம் அளிக்கப்படும்போது கவனத்தில் கொள்ளப்படும் (For an alternative land for them (MIC) to build a hostel, it will be discussed with Selangor Mentri Besar. Then, the 3 acres of land will be given to Effingham school. The premium that MIC had paid for the land will be taken into consideration for the new land).”

இந்த நிலம் எப்பிங்ஹாம் தமிழ்ப்பள்ளியிடம் “திருப்பிக்” கொடுக்கப்படும் என்றோ நிலம் திருடப்பட்டது என்றோ கூறப்படாது என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

இந்த இணக்கம் குறித்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்த ஐவரிடம் கேட்டபோது, அதனை ஏற்றுக்கொள்வதாக கூறிய அவர்கள், தாங்கள் இன்னும் கவனமாக இருப்பதாகவும் இதில் ஏதேனும் ஏற்றுக்கொள்ளக்கூடாத சூழ்நிலை ஏற்படுமானால் தாங்கள் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம் என்றனர்.

உண்ணாவிரதம் எப்போது நிறுத்தப்படும் என்ற கேள்விக்கு, அது குறித்து தாங்கள் விவாதித்து முடிவு எடுப்போம் என்றனர்.

TAGS: