மக்கள் பொது நன்மைக்காக ஒன்றுபட வேண்டும் என யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் மூவாட்ஸாம் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.மக்கள் ஒருவருக்கு ஒருவர் பகைமை கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அத்தகையப் பகை உணர்வு கால ஒட்டத்தில் அனைவருக்கும் பாதிப்பைக் கொண்டு வந்து விடும் என்றார் அவர்.
“நமது எதிர்காலத் தலைமுறையினராக இருக்கப் போகும் நமது பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் கொள்ளுப் பேரப்பிள்ளைகளுக்கும் நாம் எதனை விட்டுச் செல்லப் போகிறோம் ? அவர்கள் வளமான அமைதியான நாட்டைப் பெறப் போகின்றார்களா அல்லது தோல்வி அடைந்த நாட்டை பெறப் போகிறார்களா ? என்னுடைய எண்ணப்படி, அதற்கான தேர்வுகள் அனைத்தும் ஒவ்வொரு மலேசியரையும் சார்ந்துள்ளது.”
“தேசிய நலனுக்கு மேலாக எந்த ஒர் அரசியல் கட்சியையும் அல்லது அமைப்பையும் வைக்க வேண்டாம். அவ்வாறு செய்வது ஐக்கியத்தை சீர்குலைத்து விடும். அது ஆரோக்கியமற்ற சூழ்நிலையாகும். எனவே அது தவிர்க்கப்பட வேண்டும்,” என தமது பிறந்த நாளை ஒட்டி இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற விருதளிப்பு, விசுவாசம் தெரிவிக்கும் நிகழ்வில் மாமன்னர் கூறினார்.
இலட்சியங்களில் வெற்றி காண்பதே ஒரு நாட்டின் உண்மையான வெற்றியாகும். கடந்த கால நிகழ்வுகளில் திளைத்திருப்பது அல்ல என்றும் துவாங்கு அப்துல் ஹலிம் சொன்னார்.
“அனைத்து மலேசியர்களின் நம்பிக்கைகள், கனவுகள், கற்பனைகள், கடின உழப்பு ஆகியவற்றை அந்த இலட்சியங்கள் அடிப்படையாகக் கொண்டவை.”
பெர்னாமா