இசா கைதிகள் தங்கள் தலைவிதியை அறிந்து கொள்ள இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்

பேராக் கமுந்திங்கில் உள்ள இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள், தாங்கள் சட்ட ரீதியாக குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்க வேண்டுமா அல்லது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா என்பதை அறிந்து கொள்ள இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும்.

அந்த மய்யத்தில் உள்ள 45 கைதிகளுடைய நிலையை மறு ஆய்வு செய்வதற்கு மலேசிய மனித உரிமை ஆணையம் உள்துறை அமைச்சுடன் பேச்சு நடத்தும் என்றும் எல்லா நடைமுறைகளையும் பின்பற்றுவதற்கு காலம் பிடிக்கும் என்றும் அதன் ஆணையர் ஜேம்ஸ் நாயகம் கூறினார்.

அந்நியர்களான தடுப்புக் காவல் கைதிகளைப் பொறுத்த மட்டில் அவர்களை சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது பற்றி விவாதிக்க அந்த ஆணையம் முயலும் என அவர் சொன்னார்.

அவர் நேற்று அவர் இலங்கை, இந்தோனிசியத் தூதரக பேராளர்களுடன் அந்த மய்யத்துக்கு வருகை அளித்தார்.

“நான் திரும்பவும் வந்ததது குறித்து தடுப்புக் காவல் கைதிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கடந்த வாரம் அவர்களைச் சந்தித்த பின்னர் நாங்கள் சம்பந்தப்பட்ட தூதரகங்களுடன் பேசினோம். தங்கள் குடிமக்கள் சிறைச்சாலைகளில் இருப்பதே அவற்றுக்குத் தெரியவில்லை,” என ஜேம்ஸ் நாயகம் சொன்னார்.

கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் தூதரகப் பேராளர்கள் அங்குள்ள பல கைதிகளைச் சந்தித்தார்கள்.

அடுத்த வாரம் ஈராக்கிய இந்திய தூதரகப் பிரதிநிதிகள் அங்கு செல்வர்.

“அந்தக் கைதிகள் தங்கள் நாட்டுப் பேராளர்களுடன் மனம் விட்டு பேசினார்கள்,” என்றும் அவர் சொன்னார்.

தற்போது 20 மலேசியர்களும் 25 அந்நியர்களும் கடந்த நவம்பர் மாதம் முதல் கமுந்திங் தடுப்பு மய்யத்தில் இருந்து வருகின்றனர்.

நாடாளுமன்றம் இசா சட்டத்தை ரத்துச் செய்து விட்டு 2012ம் ஆண்டுக்கான பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தை ஏற்றுக் கொண்ட போதிலும் அந்தக் கைதிகள் 2014ம் ஆண்டு வரையில் அங்கு வைக்கப்பட்டிருப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உள்துறை அமைச்சர் ரத்துச் செய்தால் தவிர இசா சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட எந்த ஆணையும் பாதிக்கப்பட மாட்டாது என புதிய சட்டத்தின் 32வது பிரிவு கூறுகிறது.

அங்குள்ள 12 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய பின்னர் மே 12ம் தேதி சுஹாக்காம் குழு முதலில் அங்கு சென்றது.