பொதுத் தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் ஒழுங்கு நிலை நிறுத்தப்படும் என அரசாங்கம் வாக்குறுதி

அடுத்த பொதுத் தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அரசாங்கம் என்ன விலை கொடுத்தாவது அமைதியையும் ஒழுங்கையும் நிலை நிறுத்தும் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இன்று வாக்குறுதி அளித்துள்ளார்.

ஒழுங்கை நிலை நிறுத்தும் போது போலீசார் பாகுபாடு காட்ட மாட்டார்கள் என்றும் சட்டத்துக்கு இணங்க செயல்படுவர் என்றும் அவர் சொன்னார்.

“ஏதுமறியாத மக்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சட்டத்தை மீறும் எவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது,” என அவர் குளுவாங்கில் உள்ள தாமான் ஸ்ரீ லம்பாக்கில் உள்ளூர் மக்களுடன் நடந்து சென்ற பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்டால் எதிர்த்தரப்பைச் சார்ந்த அரசியல் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டும் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் கூறியிருப்பது பற்றி கருத்துரைக்குமாறு ஹிஷாமுடினிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

“அது போன்று நிகழக் கூடிய சாத்தியத்தை நான் நிராகரிக்கவில்லை,” எனக் குறிப்பிட்ட அவர், தங்கள் நோக்கங்களை அடைவதற்கு எந்த அளவுக்கும் செல்லக் கூடிய தரப்புக்களும் இருப்பதாகச் சொன்னார்.

பெர்னாமா