கேலிச்சித்திரத் தடை ‘அழுக்கு அரசியலை’த் தடுக்காது

தேர்தல் ஆணையம்(இசி), பொதுத் தேர்தலில் அரசியல் கேலிச்சித்திரங்களுக்கு தடை விதித்திருப்பது தேவையற்றது, அது ஆணிவேர் பிரச்னையான அழுக்கு அரசியலுக்குத் தீர்வுகாணும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்கிறது கெராக்கான்.

அந்தத் தடைவிதிப்பை ஏற்காத கெராக்கான் உதவித் தலைவர் மா சியு கியொங், “அந்தத் தடைவிதிக்கக் காரணமே இல்லை…… உண்மையில் அது தேவையற்றது”, என்றார்.

“கெராக்கான் நியாயமற்ற அந்தத் தடைவிதிப்பை எதிர்க்கிறது.அது கருத்துச் சுதந்திரத்துக்கும் கற்பனை வளத்துக்கும் உலை வைக்கிறது.அரசியல்சூடு அதிகரித்துவரும் வேளையில் சூட்டைத் தணிக்க அவை உதவும்”, என்று மா ஓர் அறிக்கையில் கூறினார்.

“ஓர் அரசியல்வாதியைப் பழித்துரைக்கவும் பெயரைக் கெடுக்கவும், அவமதிக்கவும் அரசியல் கேலிச்சித்திரங்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை.அதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன”, என்றாரவர்.

அரசியல் கூட்டங்களில்,தனிப்பட்ட முறையில் தாக்கிப்பேசுவதும் அரசியல் ஆதரவுக்காக அரசியல் உணர்வுகளைத் தூண்டிவிடுவதும் சாதாரணமாக நடப்பதுதான் அதற்காக அரசியல் கூட்டங்களைத் தடை செய்ய முடியுமா என்றவர் கேள்வி எழுப்பினார்.

“இசி அரசியல் கேலிச்சித்திரங்களைத் தடைசெய்வதை விட்டு, ஊடகங்களில் பொறுப்பற்ற அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதைத்தான் கவனிக்க வேண்டும்”.

தப்பான கருத்துகளைச் சொல்கிறார்களா அவர்கள்மீதுதான் இசி நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுவே அழுக்குஅரசியலைத் தடுக்க உதவும் என்று மா கூறினார்.

பொதுத் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கேலிச்சித்திரங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதற்கு அரசியல் தலைவர்கள், குறிப்பாக பிஎன் தலைவர்கள்தான் மிகுதியும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.