கணபதிராவையும் ராய்டுவையும் தாக்கிய மூவர் கைது

டிஏபி மாநில செயலவை உறுப்பினர் வி.கணபதி ராவ் அவரின் சகோதரர் ராய்டு ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மூவரைக் கைது செய்திருக்கிறார்கள்.

28-க்கும் 45வயதுக்குமிடைப்பட்டவர்களான அம்மூவரும் கிள்ளான் பத்து பெலாவில் ஓர் உணவகத்தில் கைது செய்யப்பட்டதாக வட கிள்ளான் போலீஸ் மாவட்டத் தலைவர் முகம்மட் சுக்குர் சூலோங் உத்துசான் மலேசியாவிடம் தெரிவித்தார்.

தொடக்கநிலை விசாரணையில் அம்மூவரும் வேலையற்றிருப்பவர்கள் என்பதும் ஏற்கனவே குற்றங்கள் புரிந்தவர்கள் என்பதும் தெரிய வந்திருப்பதாக அவர் கூறினார்.

“சந்தேகத்துக்குரிய அந்நபர்கள் மேலும் விசாரணை செய்யப்படுவதற்காக நாளை (ஜூன்5)வரை போலீஸ் காவலில் இருப்பர்”, என்றாரவர்.

இண்ட்ராபிலிருந்து பிரிந்துசென்று மலேசிய இந்தியர் குரல்(எம்ஐவி)என்னும் அமைப்பை வழிநடத்திவரும் சகோதரர்கள் இருவரும், கடந்த புதன்கிழமை கிள்ளானில் மூன்று நபர்களால் தாக்கப்பட்டனர். அத்தாக்குதலில் அவர்களுக்கு எலும்புமுறிவு ஏற்பட்டது.

தங்களைத் தாக்கியவர்கள் பிஎன் ஆதரவாளர்கள் என்று கூறிய கணபதிராவ், அவர்களுக்கு எம்ஐவி மே 27-இல் ஆயிரம் இந்தியர்களைத் திரட்டிப் பேரணி நடத்தி அதில் பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஆதரவு தெரிவித்தது பிடிக்கவில்லை என்றார்.