கார் எண் தகடு மீது லியாவ் தடுமாற்றம்

சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய், WWW15 கார் எண் தகட்டை 24,300 ரிங்கிட்டுக்கு தாம் ஏலத்துக்கு எடுத்ததாக கூறப்படுவது மீது தொடுக்கப்பட்ட பல கேள்விகளுக்கு இன்று பதில் அளிக்க வேண்டியிருந்தது. சில சமயங்களில் அவர் பதில் கொடுக்க முடியாமல் தடுமாறினார்.

அந்த ஏலத்துக்கு யார் பணம் கொடுத்தார்கள் என்பது தமக்கு நிச்சயமாகத் தெரியாது என்றும் நிச்சயமாக தமது அமைச்சு அதற்குப் பணம் கொடுக்கவில்லை என்றும் அவர் இன்று கோலாலம்பூரில் மசீச தலைமையகத்தில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

தாம் சிறப்பு எண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என வலியுறுத்திய லியாவ், அந்த எண் தகட்டுக்கு ஏன் இவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது எனக் கேட்கப்பட்ட போது பதில் அளிக்க முடியாமல் தடுமாறினார்.

அந்தக் கேள்வியைத் தவிர்த்த அவர், தாம் அந்த எண்ணுக்கு விண்ணப்பித்த போது அதன் விலை என்னவாக இருக்கும் என்பது தமக்குத் தெரியாது எனச் சொன்னார்.

அத்தகைய கார் எண் தகடுகளைப் பெறுவதற்கு அமைச்சர் என்ற முறையில் தகுதி இருப்பதாக லியாவ் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். தமது அதிகாரிகளும் சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் அந்த விவகாரத்தைக் கவனித்துக் கொண்டதாக அவர் சொன்னார்.

அவ்வப்போது தமது துணைத் தலைவருக்கு உதவி செய்ய மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் முன் வந்தார். எல்லா அமைச்சுக்களிலிருந்து எல்லாப் பணமும் அரசாங்கத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி ஒன்றில் சேர்க்கப்படுவதால் அந்தப் பணம் “இடது கையிலிருந்து வலது கைக்கு” சென்றது என சுவா சொன்னார்.

லியாவ் நேற்று தாம் 24,200 ரிங்கிட்டுக்கு அந்த எண் தகட்டைத் தற்காத்துப் பேசினார். தமது அமைச்சு, தமது நடப்பு அதிகாரத்துவ வாகனத்தை மாற்றுவதால் புதிய எண் தகடு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.