பெர்சே 3.0 மீது அரசாங்கம் அமைத்துள்ள விசாரணைக் குழு ‘கால விரயம்’ என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி வருணித்துள்ளார்.
ஏனெனில் அந்த ஆர்ப்பாட்டத்தை சூழ்ந்துள்ள விவரங்கள் அனைவருக்கும் தெரிந்தவை என்றார் அவர்.
‘இதில் விசாரிப்பதற்கு எதுவுமே இல்லை. அந்தப் பேரணி சட்டவிரோதமானது என நமக்கு ஏற்கனவே தெரியும். ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்ற ஆணையை மீறியுள்ளனர். டாத்தாரான் மெர்தேக்காவைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த தடையை மீறுவதற்கு அவர்கள் எண்ணம் கொண்டிருந்தனர்,” என இப்ராஹிம் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.
ஆகவே ஏப்ரல் 28ம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தின் போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டுகின்றவர்களை சமாதானப்படுத்துவதற்காக அரசாங்கம் அந்தக் குழுவை அமைக்க வேண்டிய அவசியமே இல்லை என்றார் அவர்.