போலியானது எனக் கூறப்படும் முழுமையில்லாத முகவரிகளைக் கொண்டுள்ள வாக்காளர்கள் பதிவை நிராகரிக்கும் அதிகாரம் இசி என்ற தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என அதன் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறியிருக்கிறார்.
அந்தப் பதிவுகள் மீது உள்ளூர் மக்களிடமிருந்து ஆட்சேபம் ஏதுமில்லாத சூழ்நிலையில் அவை பெரிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்டு விட்டால் குறை கூறுகின்றவர்களுடைய கருத்துக்கள், வாக்காளர்கள் மாற்றங்களுக்கு விண்ணப்பித்தால் தவிர எந்தப் பயனையும் தரப் போவதில்லை என்றார் அவர்.
“ஜோகூரில் கம்போங் மிலாயு மஜிடியில் உள்ள விவகாரங்களைப் போன்று தகுதி பெற்ற மலேசியக் குடிமக்களை அவர்கள் விண்ணப்பிக்கும் நேரத்தில் உள்ள அடையாளக் கார்டு முகவரிகளில் தேசியப் பதிவுத் துறையுடனான இணையத் தொடர்பில் சரி பார்த்த பின்னர் பதிவு செய்வதே இசி-யின் பொறுப்பாகும்.”
இசி-யால் நியமிக்கப்பட்ட அரசாங்கத் துறைகள், அரசு சாரா அமைப்புக்கள், அஞ்சலகங்கள், அரசியல் கட்சிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைச் சார்ந்த துணை தேர்தல் பதிவதிகாரிகள், எந்த ஒரு வாக்காளரையும் 71 குறியீட்டை அல்லது பொருத்தமானால் மற்ற குறியீடுகளைப் பயன்படுத்தி பதிவு செய்ய முடியும்.”
“தேசியப் பதிவுத் துறையுடனான இணைய இணைப்பு அந்த முகவரியைச் சரி பார்த்து, தேசியப் பதிவுத் துறையின் புள்ளிவிவரக் களஞ்சியத்தில் பதிவு செய்யப்பட்ட விவரத்துக்கு ஏற்ப துல்லிதமானது, சட்டப்பூர்வமானது எனத் தெரிவிக்கப்பட்ட பின்னர் அந்தப் பதிவுகளை நிராகரிக்கும் உரிமை இசி-க்கு இல்லை,” என அப்துல் அஜிஸ் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.