சொய் லெக் மெர்டேகா மைய கருத்துக்கணிப்பால் கலக்கமுறவில்லை

சீனர்களிடையே, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ஆதரவு இறங்குமுகமாக இருப்பதைக் காண்பித்த மெர்டேகா மையத்தின் அண்மைய கருத்துக்கணிப்பு குறித்து மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கவலையுறவில்லை.

இதெல்லாம் சகஜம்தான் என்ற பாணியில் “அப்படி , இப்படித்தான் இருக்கும்”, என்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.

ஏப்ரல் 28 பெர்சே 3.0பேரணி நடந்த மூன்றாவது  வாரத்தில் மெர்டேகா மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், நஜிப்புக்கான ஆதரவு 69விழுக்காட்டிலிருந்து 65விழுக்காட்டுக்குக் குறைந்தது.இதற்கு சீனர்களிடையே அவருக்கிருந்த ஆதரவில் ஏற்பட்ட 19விழுக்காடு சரிவுதான்  காரணமாகும்.  

சுவா, கருத்துக்கணிப்பை ஒரேயடியாக தாம் ஒதுக்கித்தள்ளவில்லை என்றார்.அதே நேரத்தில் விரிவான கண்ணோட்டத்தில் இதைப் பார்க்க வேண்டும் என்று கூறிய அவர் அண்மைய “நிகழ்வுகள்” ஆதரவு குறைந்ததற்குக் காரணமாக இருக்கலாம் என்றார்.

என்ன “நிகழ்வுகள்” என்பதை விளக்குமாறு பலமுறை நெருக்கியபோதும் அவர் விளக்க மறுத்தார்.நடந்த சில விசயங்கள் “சீனர்களுக்குப் பிடிக்காதிருக்கலாம்” என்று மட்டும் குறிப்பிட்டார்.

கருத்துக்கணிப்பு மசீச பணியைப் பாதிக்குமா என்று கேட்டதற்கு பாதிக்காது என்றார்.

“கருத்துக்கணிப்பால் நாங்கள் பாதிக்கப்படுவதில்லை.கருத்துக்கணிப்பில் இறங்முகமாக இருந்தால் கடையைக் கட்டுவதும் ஏறுமுகமாக இருந்தால் கெந்திங் சென்று கொண்டாடுவதும் எங்கள் கொள்கையல்ல”.

பினாங்கில் செய்தியாளர் கூட்டங்களுக்கு நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் மற்றும் உத்துசான் மலேசியா செய்தியாளர்கள் வரக்கூடாது என்று டிஏபி தடை செய்திருப்பதை சுவா கண்டித்தார்.

“நாங்கள் சினார் ஹராபான் வரக்கூடாது என்று தடுப்பதில்லை.மலேசியாகினி வருவதைத் தடுப்பதில்லை”, என்று சுவா குறிப்பிட்டார்.

“மழையோ, வெயிலோ”, கருத்துக்கணிப்பைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கட்சி அதன் பணியைத் தொடரும் என்றாரவர்.