தற்காப்பு ரகசியங்கள் விற்கப்பட்டதாக கூறப்படுவது மீது கடற்படை மௌனம்

இரண்டு ஸ்கார்ப்பியோன் ரக நீர்மூழ்கிகளுக்கான கொள்முதல் ஆணையுடன் தொடர்புடைய ரகசிய ஆவணம் ஒன்று அந்நிய நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுவது மீது கருத்துரைக்க அரச மலேசியக் கடற்படை மறுத்துள்ளது.

“இப்போதைக்கு எந்தக் கருத்தும் தெரிவிக்கப்பட மாட்டாது,” என அரச மலேசியக் கடற்படையின் ஊடக, இணையத் தள இயக்குநர் காமண்டர் இஸ்மாயில் ஒஸ்மான் மலேசியாகினி தொடர்பு கொண்ட போது கூறினார்.

கடற்படை ஏன் கருத்துரைக்க மறுக்கிறது என வினவப்பட்ட போது இஸ்மாயில் மேலும் விவரம் கூற மறுத்து விட்டார்.

பாரிசைத் தளமாகக் கொண்ட கப்பல் கட்டும் நிறுவனமான டிசிஎன்எஸ், அந்த ரகசிய ஆவணத்தை வாங்கியதாக மே 31ம் தேதி மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் கூறிக் கொண்டது. அந்த பிரஞ்சு நிறுவனம் பின்னர் மலேசியாவுக்கு நீர்மூழ்கிகளை விற்றது.

டிசிஎன்எஸ்-க்கு எதிராக பிரான்ஸில் நடைபெறும் ஊழல் விசாரணையில் ஹாங்காங்கில் இயங்கிய தெரசாசி (Terasasi) நிறுவனத்துக்கு பணம் கொடுத்த தகவல் தெரிய வந்துள்ளது.

தெரசாசி நிறுவனத்தின் இயக்குநர் அப்துல் ரசாக் பகிந்தா ஆவார். அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு நெருங்கிய நண்பர் ஆவார்.

அந்த ஊழலில் தமது ஈடுபாடு குறித்து விளக்கமளிக்குமாறு நஜிப் மீது நெருக்குதல் கொடுக்கப்பட்டு வருகிறது.

‘கையூட்டுக்கள் கைமாறியதாக கூறப்பட்டது’

அந்த பிரஞ்சு நிறுவனத்துக்கும் தெரசாசி-க்கும் இடையில்  நிகழ்ந்துள்ள பல பரிவத்தனைகளில் அது ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது. அவற்றில் மொத்தம் 36 மில்லியன் யூரோவை (142 மில்லியன் ரிங்கிட்) தெரசாசி டிசிஎன்எஸஸிடமிருந்து பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பேரத்தில் “ஆதரவுச் சேவைகளுக்கு” பொறுப்பான பெரிமெக்கார் சென் பெர்ஹாட் வழி நஜிப் (அப்போதைய தற்காப்பு அமைச்சர்) கோரியதாக பிரஞ்சு விசாரணையின் அடிப்படையில் இதற்கு முன்னர் சுவாராம் கூறிக் கொண்டது.

தொடக்கத்தில் பிரஞ்சு விசாரணைகளுக்கு உதவுவதற்கு விருப்பம் தெரிவித்த நடப்புத் தற்காப்பு அமைச்சர் ஸாஹிட் ஹமிடி பின்னர் அந்த விசாரணைகளில் கலந்து கொள்ளவோ அல்லது அமைச்சின் பேராளர்களை அனுப்பவோ மறுத்து விட்டார்.