‘நோ எங்கள் அச்சத்தை உறுதி செய்து விட்டார்’

சிலாங்கூர்கூ பெர்சே நடவடிக்கையை  சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவர் நோ ஒமார் நிராகரித்துள்ளது, பிஎன்- எதனையோ மறைக்கிறது என்பதை மெய்பிப்பதாக மந்திரி புசாரின் அரசியல் செயலாளர் பாக்கே ஹுசின் கூறிக் கொண்டுள்ளார்.

அடுத்த மாநிலச் சட்டமன்றத் தேர்தல் தூய்மையாகவும் நியாயமாகவும் முறைகேடுகள் இல்லாமலும் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்கு வாக்காளர்களுடைய அடையாளங்களைச் சரி பார்க்க சிலாங்கூர் அரசாங்கம் தொடங்கியுள்ள நடவடிக்கையை நோ ஆதரிக்க வேண்டும் என பாக்கே விடுத்துள்ள அறிக்கை கூறியது.

“அந்த நடவடிக்கை மீது நோ ஐயப்பாடு கொண்டுள்ளது, பிஎன், தேர்தல் ஆணையம், தேசியப் பதிவுத் துறை ஆகியவை மோசடியில் சம்பந்தப்பட்டுள்ளன என சிலாங்கூர் மக்கள் கொண்டுள்ள அச்சத்தை உறுதிப்படுத்தியுள்ளது,” என அவர் சொன்னார்.

வாக்காளர் அடையாளங்களை சரி பார்க்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. சிலாங்கூர் மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்பதால் அந்த நடவடிக்கையைப் புறக்கணிக்குமாறு நோ பொது மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் பற்றி பாக்கே கருத்துரைத்தார்.

2008ம் ஆண்டுக்குப் பின்னர் சிலாங்கூரில் 600,000 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட பின்னர் சிலாங்கூர், அந்த நடவடிக்கையை தொடங்கியது. நாட்டில் வாக்காளர் எண்ணிக்கை அதிக அளவில் கூடியுள்ள மாநிலம் சிலாங்கூர் ஆகும்.

அந்தப் புள்ளிவிவரம் மாநில அரசாங்கத்தின் கண்களைத் திறந்துள்ளது என்றும் அது பொறுப்புள்ள அரசாங்கம் என்பதால் அந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளது என்றும் பாக்கே விளக்கினார்.

அந்த நடவடிக்கை தேர்தல் ஆணையத்துக்கு உதவியாக இருப்பதோடு ஆணையத்தின் தோற்றத்தை மேம்படுத்துவதற்கும் உதவக் கூடும் என அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் அந்த நடவடிக்கையில் மாநில அரசு ஊழியர்களும் கிராம பாதுகாப்பு மேம்பாட்டுக் குழுக்களும் சம்பந்தப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தாங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் வசிக்கின்றனரா என்பதை அவர்கள் உறுதி செய்வர்.