ஜயிஸ் அதிரடிச் சோதனை தொடர்பில் பாஸ் மீது அம்னோ வழக்கு

கடந்த மாதம் ஒரு தேவாலயத்தில் மாநில இஸ்லாமிய விவகாரத் துறை மேற்கொண்ட சர்ச்சைக்குரிய அதிரடிச் சோதனையில் அம்னோவுக்கு சம்பந்தமுண்டு என்று கூறியதற்காக பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி மீதும் மேலும் ஐவர்மீதும் சிலாங்கூர் அம்னோ சிவில் வழக்கு ஒன்றை இன்று பதிவு செய்தது.

தங்களின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் பாஸ் கட்சியின் செய்தித்தாளான ஹராகாவில் செய்தி வெளியிட்டதற்காக முஸ்தபா அலியும் மற்ற ஐவரும் ஆளுக்கு ரிம10 மில்லியன் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பதுடன் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெளிவரும் அச்செய்தித்தாளில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று அது கோருகிறது.

எதிர்வாதிகளாக, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், துணைத் தலைவர் முகம்மட் சாபு, ஹராகாவை வெளியிடும் அங்காத்தான் இடாரான் எண்ட் சென். பெர்ஹாட், ஹராகா தலைமை ஆசிரியர் அஹமட் லுப்தி ஒத்மான், செய்தியாளர் கைருல் அஸ்லாம் முகம்மட் ஆகியோரும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கட்சியின் சார்பில் வழக்கைப் பதிவுசெய்த சிலாங்கூர் அம்னோ தொடர்புக்குழுச் செயலாளர் முகம்மட் ஸின் முகம்மட் (இடம்), நாட்டின் இணக்க நிலையையும் அமைதியையும் கருத்தில்கொண்டு  தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பொறுப்பு ஆளும் கூட்டணியின் முதுகெலும்பாகத் திகழும் அம்னோவுக்கு உண்டு என்றார். 

“அம்னோ ஓர் இஸ்லாமிய கட்சி, மலாய்க்காரர் கட்சி. அதே வேளை அது தேசிய நலன்களுக்காக போராடும் கட்சியுமாகும். மற்றவர்கள், அவரவர் சமயங்களைப் பின்பற்றுவதை நாங்கள் தடுத்ததில்லை. அதை மதிக்கிறோம்”, என்று ஷா ஆலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கைப் பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

முஸ்தபா “தீய நோக்கத்துடன்” பேசிய பேச்சு கிறிஸ்துவர்கள் அம்னோமீது ஆத்திரம் கொள்ளவும் வெறுப்புக் கொள்ளவும் தூண்டுதலாக அமையலாம் என்று முகம்மட் ஸின் குறிப்பிட்டார்.

சொன்னதை மீட்டுக்கொள்ளவும் மன்னிப்பு கேட்கவும் முஸ்தபாவுக்குப் போதுமான கால அவகாசத்தைக் கொடுத்தாயிற்று என்றாரவர்.

“ரமலான் உணர்வுடன் அவர்கள் மன்னிப்பு கேட்பார்கள் எனறு எதிர்பார்த்து அதை ஏற்பதற்காகக் காத்திருந்தோம்.

“ஆனால், முஸ்தபா அலி, ‘நீதிமன்றத்தில் பார்ப்போம்’ என்று சொல்லி விட்டார். அதுதான் இப்படி”, என்று முகம்மட் ஸின் கூறினார்.

ஹராகா ஆகஸ்ட் 19-21 பதிப்பில், ஆகஸ்ட் 3-இல் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில்(டியுஎம்சி) சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஸ்) மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் அம்னோவுக்கும் சம்பந்தமுண்டு என்று முஸ்தபாவை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அந்த அதிரடிச் சோதனை நடைபெறுவதற்கு அம்னோ கட்சியினர் சிலர் தூண்டுதலாக இருந்தனர் என்று ஜயிஸின் “உள்வட்டாரத்திலிருந்து தகவல்”கிடைத்திருக்கிறது என முஸ்தபா கூறியதாக அந்தச் செய்தி குறிப்பிட்டது.

TAGS: