யுனிசெல் என்ற யூனிவர்சிட்டி சிலாங்கூர் மாணவர்களுக்கு கடன்களை வழங்குவதில்லை என பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதி முடிவு செய்துள்ளது ‘நியாயமானது” என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று கூறியிருக்கிறார்.
“பிடிபிடிஎன் எல்லாக் கடன்களையும் ரத்துச் செய்யவில்லை. மறு ஆய்வு செய்யும் பொருட்டு தற்காலிகமாகவே அதனை நிறுத்தியுள்ளது. அது நியாயமானதே.”
“மாணவர்கள் கடன்களை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என சிலாங்கூர் மந்திரி புசார் சொன்னால் பிடிபிடிஎன் கடன்களைக் கொடுக்க வேண்டிய தேவை இல்லை,” என அவர் நிருபர்களிடம் கூறினார்.
சிலாங்கூர் அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்தப் பல்கலைக்கழகத்துக்கு அந்த நிதி நிறுவனம் முன் கூட்டியே தகவல் கொடுத்திருக்க வேண்டும் என அவர் எண்ணவில்லையா என அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த முஹைடின், “உங்கள் கேள்வி மிகவும் தீய நோக்கத்தைக் கொண்டது. அது நான் சொல்வதின் அர்த்தம் அல்ல என்பது இங்குள்ள மற்ற ஊடகங்களின் பேராளர்களுக்கும் நன்கு தெரியும் என நான் நினைக்கிறேன்,” என்றார்.
அந்த விவகாரம் பற்றி மேலும் நெருக்கப்பட்ட போது முஹைடின் அந்தக் கேள்வியை ஒதுக்கியதுடன்,”பரவாயில்லை. அவர்கள் அதனை ஆய்வு செய்கின்றனர்,” எனத் தெரிவித்தார்.