அரசாங்க ஆதரவாளர்களால் வெளிநாட்டிலிருந்து நிதியுதவி பெறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெர்சே 2.0, அதன் நிதிமூலங்களைத் தெரிவிப்பதற்குத் தயாராகவுள்ளது.
கடந்த வாரம் மலேசியாகினியின் நேர்காணல் ஒன்றில் பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், ஜூலை 9 பேரணி, மலேசியர்களின் நிதியுதவி கொண்டு நடத்தப்பட்ட மக்கள் இயக்கமாகும் என்றார்.
“பேரணி முழுக்க முழுக்க மலேசியர்-நிதியுதவியுடன் நடத்தப்பட்டது”, என்றாரவர்.
சிலாங்கூர் மாநில அரசு கொடுத்த நிதி போக, பேரணிக்கு முன்னர் சாதாரண மலேசியர்கள் அளித்த நன்கொடைகளும் பேரணியை நடத்த உதவியாக இருந்தன.
சிலாங்கூர் அரசு ரிம15,000 வழங்கியது. அந்நிதி பற்றிக் குறிப்பிட்ட மந்திரி புசார் காலிட் இப்ராகிம், அது “மக்களாட்சி செம்மையாக நடைபெறுவதற்கு” தம் அரசின் காணிக்கை என்றார்.
பேரணி நடத்த பெரும் செலவாகவில்லை என்று கூறிய அம்பிகா, திரட்டப்பட்ட நிதியில் ஒரு பகுதி, கைது செய்யப்படுவோரைப் பிணையில் எடுப்பதற்கென்று ஒதுக்கி வைக்கப்பட்டது என்றார்.
அந்த நிதியிலிருந்துதான் பெர்சே 2.0-ன் செயலகமாக செயல்பட்ட ஒரு அரசுசாரா அமைப்பான எம்பவரின்(Empower) பணியாளர்களுக்கும் மற்ற தன்னார்வலர்களுக்கும் அலவன்ஸ் வழங்கப்பட்டது.
வெளிநாட்டு நிதியுதவி பற்றிக் குறிப்பிட்ட அம்பிகா இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள்- தேசிய மக்களாட்சிக் கழகம் (என்டிஐ), ஓப்பன் சோசைடி இன்ஸ்டிடியுட் (ஓஎஸ்ஐ)- நிதி வழங்கி உதவியதாகக் கூறினார். ஆனால், அந்த நிதியுதவி, வருங்காலத் திட்டத்துக்கானது. பேரணிக்குக் கொடுக்கப்பட்டதல்ல.
“அதைப் பற்றியெல்லாம் தெரியப்படுத்துவதற்குத் தடை இல்லை…. அவற்றைத் தெரியப்படுத்தத்தான் போகிறோம். ஆனால், எங்களின் ஆவணங்கள் எல்லாவற்றையும் போலீஸ் எடுத்துச் சென்றுவிட்டார்கள். எல்லாமே அவர்களிடம்தான் இருக்கிறது.”
போலீசார் ஜூன் 19-இல், எம்பவர் அலுவலகத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அதில் எம்பவர் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். பெர்சே 2.0 சட்டைகளையும் அள்ளிச் சென்றனர். கூடவே நன்கொடையாளர் பற்றிய ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர்.
பெர்சே 2.0-இன் அடையாளமான மஞ்சள் நிற டி-சட்டைகளுக்குத் தடை செய்ததால் அதன் விற்பனைவழி கிடைத்து வந்த வருமானம் நின்றுபோனது. அந்த நேரத்தில் பொதுமக்களின் நன்கொடைகள் கைகொடுத்தன.
கிறிஸ்துவ அமைப்புகள் நிதிகொடுத்து உதவுவதாக குற்றச்சாட்டு
பேரணிக்கு முன்னர், அம்னோ தொடர்புடைய உத்துசான் மலேசியா, ஜெர்மனியின் கொன்ராட் அடினார் அறவாரியம், கெனடாவின் அல்லைட் அறநிறுவனம் போன்றவை உள்பட வெளிநாட்டுக் கிறிஸ்துவ அமைப்புகள் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை அக்கூட்டணிக்குக் கொடுத்திருப்பதாகக் குற்றம் சுமத்தின.
நாட்டில் குழப்பம் உண்டுபண்ணுவதற்காகவே பெர்சேயில் வெளிநாட்டுச் சக்திகள் ஊடுருவியிருப்பதாகவும் கூறப்பட்டது.
அக்குற்றச்சாட்டின்மீது உடனடி விசாரணை தொடங்கியிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் கூறினார். ஆனால், விசாரணை முடிவுகளைப் போலீசார் இதுநாள்வரை வெளியிடவில்லை.
என்டிஐ என்பது உலக முழுவதும் மக்களாட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட அமெரிக்கத் தொண்டு நிறுவனம்.பன்னாட்டு மேம்பாட்டுக்கான அமெரிக்க அரசின் முகமையகம், அமெரிக்க வெளியுறவுத் துறை முதலான 160 நிறுவனங்கள் அதற்கு நிதியுதவி அளிக்கின்றன. தனிப்பட்டவர்களும் நிதியுதவி செய்கின்றனர்.
இதனிடையே ஓஎஸ்ஐ, முதலீட்டாளரும் கொடையாளருமான ஜார்ஜ் சோராஸால் அமைக்கப்பட்டதாகும். மக்களுக்குக் கடப்பாடு கொண்ட மக்களாட்சி அரசுகளை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்ட அமைப்பு அது.