ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் மீது ‘அவசரத் தீர்மானத்தை’ நுருல் சமர்பித்தார்

அரச மலேசியக் கடற்படையின் ரகசிய ஆவணம் ஒன்று பிரஞ்சுத் தற்காப்பு நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுவது மீது அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் அவசரத் தீர்மானம் ஒன்றை லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நுருல் இஸ்ஸா அன்வார் நேற்று சமர்பித்தார்.

நிரந்தர விதிகள் 18(11)ன் கீழ் அந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் கொள்முதல் செய்யப்பட்ட போது கொடுக்கப்பட்ட தரகுப் பணம் பற்றியும் ரகசிய ஆவணங்கள் விற்கப்பட்டது பற்றியும் தற்காப்பு அமைச்சு விளக்க வேண்டும் என அந்தத் தீர்மானம் கோருகிறது.

பிரஞ்சுக் கப்பல் கட்டும் நிறுவனமான டிசிஎன்எஸ் ‘வர்த்தக பொறியியல் வேலைகளுக்காக’ 36 மில்லியன் யூரோவை (142 மில்லியன் ரிங்கிட்) தெராசிசி (ஹாங்காங்) லிமிடெட்-க்கு கொடுத்ததாக மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் தொடுத்துள்ள வழக்கில் அதன் சார்பில் ஆஜராகும் பிரஞ்சு வழக்குரைஞர் ஜோசப் பிரெஹாம் தகவல் வெளியிட்ட பின்னர் அந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்கை விசாரிக்கும் பிரஞ்சு நீதிபதிகள், ரகசிய கடற்படை ஆவணம் பற்றி தெரிய வந்ததும் டிசிஎனெஸ்-ஸின் நிதிப் பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட அறிக்கைகளையும் எதற்காக பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரத்தையும் கோரியுள்ளனர்.

அந்த ஆவணம் நீர்மூழ்கிகளுக்கான அளிப்பாணை சம்பந்தப்பட்ட மதிப்பீடு ஆகும். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நெருங்கிய நண்பரான அப்துல் ரசாக் பகிந்தா, அவரது தந்தை அப்துல் மாலிம் பகிந்தா ஆகியோர் தெராசிசி நிறுவன இயக்குநர்கள் ஆவர்.

நீர்மூழ்கிகள் தொடர்பான பரிவர்த்தனையில் தெராசிசி-யின் பங்கு, அப்துல் ரசாக்கின் பங்கு ஆகியவற்றை அரசாங்கம் விவரமாக விளக்க வேண்டும் என்றும் நுருல் தமது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் அடுத்த திங்கட்கிழமை மீண்டு கூடுகிறது.