யூனிசெல் என்ற யூனிவர்சிட்டி சிலாங்கூர் மாணவர்களுக்கு பிடிபிடிஎன் கடன் கொடுக்கப்படுவதை நிறுத்தி வைத்துள்ள தேசிய உயர் கல்வி நிதி நிறுவனம் இன்னொரு சிலாங்கூர் உயர் கல்விக் கூடம் மீதும் அந்த முடக்கத்தை அமலாக்கியுள்ளது.
குயிஸ் என்ற சிலாங்கூர் அனைத்துலக இஸ்லாமியைப் பல்கலைக்கழக கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு நேற்று நடத்தப்பட்ட விளக்கமளிப்பின் போது அடுத்த அறிவிப்பு வரை பிடிபிடிஎன் கடன்கள் நிறுத்தி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
உபகாரச் சம்பளங்கள், கடன்கள் சம்பந்தப்பட்ட துறையின் தலைவர் புதிதாகச் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு விளக்கமளித்தார் என அடையாளம் தெரிவிக்க விரும்பாத மாணவர் ஒருவர் மலேசியாகினியிடம் கூறினார்.
யூனிசெல், குயிஸ் ஆகியவை சிலாங்கூர் அரசாங்கத்தின் கீழ் வருவதால் பிடிபிடிஎன் கடன்கள் முடக்கப்பட்டதாக அப்போது அறிவிக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார்.
ஒரு மணி நேரத்துக்கு நிகழ்ந்த விளக்கமளிப்புக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.