“அதிகாரத்தில் இருக்கும் பக்காத்தான் அம்னோவைப் போன்று மோசமானதாக இருக்கும் என்றால் ஹிண்ட்ராப் தனது வியூகத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அம்னோ தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் எதுவும் மாறாது”
பிஎன்-னுக்கும் பக்காத்தானுக்கு ஹிண்ட்ராப் சவால் விடுகிறது
சம்பா: ஹிண்ட்ராப் ஆலோசகர் என் கணேசன் சொல்வதைப் போல பக்காத்தான் ராக்யாட்-டிடம் ‘அரசியல் மரபணு’ இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு ஏழை இந்தியர்களுடைய வாக்குகள் மட்டுமே தேவை. ஆனால் அவர்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்னைகள் மீது அக்கறை இருப்பதாகவோ அவற்றை தீர்ப்பதற்கான ஆற்றல் இருப்பதாகவோ தெரியவில்லை.
இந்தியர்கள் ஒதுக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களையும் அறிகுறிகளையும் ஹிண்ட்ராப்பின் 18 அம்சக் கோரிக்கைகள் விளக்குவதால் பக்காத்தான் அதனுடன் கலந்துரையாடலை நடத்த வேண்டும்.
கேகன்: ஹிண்ட்ராப் அதன் 18 அம்சக் கோரிக்கையில் இந்தியர் ஆதரவுத் திட்டங்களுக்கு 100 பில்லியன் ரிங்கிட் கோரியுள்ளது. அத்துடன் இது வரை இடிக்கப்பட்ட இந்துக் கோயில்களுக்காக 150 பில்லியன் ரிங்கிட்டையும் அது கேட்டுள்ளது. தமிழ்ப் பள்ளிகளுக்கான 100 மில்லியன் ரிங்கிட் கோரிக்கை அமைதியாக கைவிடப்படுள்ளது. அந்தக் கோரிக்கை ஹிண்ட்ராப்பின் தொடக்கப் பதிப்பில் இருந்தது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.
பெர்க்காசாவைக் காட்டிலும் ஹிண்ட்ராப் எந்த வகையில் சிறந்தது ? இந்தியத் தீவிரவாதமும் மலாய்த் தீவிரவாதத்தைப் போன்று மோசமானதே. இது பல இன சமுதாயம். நாம் ஒர் இனத்தை மட்டுமின்றி அனைத்து இனங்களையும் சார்ந்த ஏழை மக்களை மேம்படுத்துவது பற்றிப் பேச வேண்டும்.
புருட்டஸ்: கணேசன் நீங்கள் தீவிர இனவாதி போல் பேசுகின்றீர்கள். நீங்கள் எப்போது அப்படி மாறினீர்கள் ? நீங்கள் ஒரு காலத்தில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றுக்கு நிர்வாக இயக்குநராக பணியாற்றியுள்ளீர்கள். அப்போது நீங்கள் இந்தியர் ஆதரவு நிலையைக் கடைப்பிடித்ததே இல்லை.
நீங்கள் உங்கள் பல்கலைக்கழக நாட்களில் சோஷலிசக் கட்சி எனக் கருதப்படும் பார்ட்டி ராக்யாட் மலேசியாவில் இருந்தீர்கள். அதற்கு பின்னர் நீங்கள் முதலாளித்துவ வாதியாக் மாறினீர்கள். பெரும் பணத்தை சேர்த்தீர்கள். உங்களுக்கு பெரிய பங்களா சொந்தமாக இருக்கிறது. குழந்தைகள் எல்லாம் நன்கு கல்வி கற்றுள்ளனர். இப்போது தான் இந்தியர்களைப் பற்றிக் கவலைப்படுகின்றீர்கள்.
2007ம் ஆண்டு 30,000 அல்லது அதற்கு மேற்பட்ட இந்தியர்களை சாலைகளில் ஒன்று திரட்டியது பற்றியே நீங்கள் எப்போதும் பெருமையடித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
நீங்கள் பிரிட்டிஷ்காரரிடமிருந்து கோரும் தொகையில் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு மில்லியன் பவுன் கொடுப்பதாக நீங்கள் வாக்குறுதி அளித்ததால் தான் அந்த ஏழை இந்தியர்கள் அங்கு கூடினர் என நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அந்தக் கோரிக்கை என்னவானது ?
அனைவருக்கும் நியாயம்: ஹிண்ட்ராப் பேச்சு நடத்த முன்வரவில்லை. அது தன்னைப் பெரிதாக நினைத்துக் கொண்டு கோரிக்கைகளை விடுத்துள்ளது. ஹிண்ட்ராப் ஒரு மனிதருடைய நிகழ்ச்சி நிரல் என்பதை பல இந்தியர்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளதால் அவர்கள் ஹிண்டாரப்பை ஆதரிக்கவில்லை. அதனால் அது கர்வமாக நடந்து கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அதன் கோரிக்கைகளுக்கு பக்காத்தான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஹிண்ட்ராப் தான் பக்காத்தானுடன் ஒத்துழைக்க வேண்டும். அது பக்காத்தானுக்கு தனது ஆதரவை வழங்க வேண்டும். பக்காத்தான் 13வது தேர்தலில் வெற்றி பெற்றால் அது நியாயமான ஏற்றுக் கொள்ளக் கூடிய கோரிக்கைகளை விடுக்கலாம். அபத்தமான கோரிக்கைகளை விடுக்கக் கூடாது. காரணம் இந்தியர்கள் சிறுபான்மையினரே.
எல்லாவற்றுக்கும் மேலாக அது ஒரு தவணைக்கு மட்டும் தான். பக்காத்தான் எதுவும் செய்யா விட்டால் நாம் அதனை விரட்டி விடுவோம்.
கடைசியாக ஒன்று, நான் ஒர் இந்தியன். நான் ஹிண்ட்ராப்பை ஆதரிக்கவில்லை.
பெர்ட் தான்: தேர்வு என்றால் நீங்கள் சிறந்ததாகக் கருதும் ஒன்றை (அது முழுமையானதாக இல்லாவிட்டாலும்) தேர்வு செய்ய வேண்டும்.
ஹிண்ட்ராப்புக்குத் தலைமை தாங்குகின்றவர்கள் பிஎன்னை ஆதரிப்பதா பக்காத்தானை ஆதரிப்பதா என்பதில் உறுதியாக இல்லை. எந்தத் தரப்புடனும் சேராமல் இருப்பதே அவர்கள் முன்பு உள்ள அபாயமாகும்.
அதனால் அவர்கள் முக்கிய அரசியல் நீரோட்டத்திலிருந்து விடுபட்டுப் போகலாம்.
இந்த நாட்டில் ஒரு தொகுதியில் கூட இந்தியர்கள் பெரும்பான்மையாக இல்லை என்பதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். ஆகவே அவர்கள் தங்களது சமூக பொருளாதார நலன்களுக்கு உண்மையான பிரதிநிதித்துவத்தை பெற முடியாது.
என்றாலும் அவர்கள் இன்னும் கர்வமாக நடந்து கொள்கின்றனர். நமது போராட்டத்துக்கு சிறந்ததைப் பெறுவதற்கு விட்டுக் கொடுக்கும் கலையே அரசியல் ஆகும்.
ஆனால் அவர்கள் இனவாதக் கொள்கைகளை வலியுறுத்துவதால் ஹிண்ட்ராப் செல்வாக்கு குறைந்து விட்டது. அதனால் கல்வி கற்ற இந்தியர்கள் அதிலிருந்து ஒதுங்கியுள்ளனர்.
பார்வையாளன்: பெரும்பான்மை மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அம்னோ கட்டுக்குள் உள்ள அரசாங்கம் பின்பற்றுகின்ற இன வேறுபாட்டுக் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருமாறு மட்டுமே ஹிண்ட்ராப் தனது 18 அம்ச கோரிக்கைகளில் கோரியுள்ளது.
நீண்ட காலம் அம்னோ உறுப்பினராக இருந்து இனப் பாகுபாட்டுக் கொள்கைகளை அமலாக்கிய பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் இப்போது அந்தக் கொள்கைகளில் சிலவற்றை ஒரளவுக்கு மாற்றுவதற்குத் தயாராக இருக்கலாம்.
ஆனால் அவரும் இப்போது பிகேஆர் தலைவர்களாக உள்ள மற்ற முன்னாள் அம்னோ உறுப்பினர்களும் பாகுபாடான் கொள்கைகளை கைவிட விரும்புவதாக அறிவிக்கும் துணிச்சலைப் பெற்றிருக்க வில்லை. காரணம் அவ்வாறு செய்வது ஏற்கனவே சிறப்புச் சலுகைகளுக்கு பழகிப் போய்விட்ட பெரும்பான்மை மலாய்க்காரர்களுடைய ஆதரவை இழப்பதற்கு வழிகோலி விடக் கூடும்.
அந்த உண்மை நிலையைக் கருத்தில் கொண்டு பக்காத்தானை முழுமையாக ஆதரித்து அது அடுத்த அரசாங்கத்தை அமைக்க உதவி செய்து பின்னர் தேவையான கோரிக்கைகளை விடுப்பதே ஹிண்ட்ராப்புக்குச் சிறந்த வியூகமாகும்.
அதிகாரத்தில் இருக்கும் பக்காத்தான் அம்னோவைப் போன்று மோசமானதாக இருக்கும் என்றால் ஹிண்ட்ராப் தனது வியூகத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அம்னோ தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் எதுவும் மாறாது.