இரண்டு ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிகள் சம்பந்தப்பட்ட ரகசியமான அரச மலேசியக் கடற்படை ஆவணங்கள் பிரஞ்சுத் தற்காப்பு நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுவதை தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹின் ஹமிடி மறுத்துள்ளார்.
“அது நிகழ்ந்துள்ளதற்கான ஆதாரம் ஏதுமில்லை. என்றாலும் அந்த நடவடிக்கை நிரூபிக்கப்பட்டால் தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டுள்ளதால் நாங்கள் அதனை முழுமையாக விசாரிப்போம் என நான் உறுதி அளிக்கிறேன்,” என அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என வலியுறுத்திய அகமட் ஸாஹிட், அந்நிய நிறுவனம் ஒன்றுக்கு ரகசிய ஆவணம் விற்கப்பட்டது மீது தமது அமைச்சுக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
“என்றாலும் தகவல் மலேசியாவிலிருந்து கசிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளதால் நாங்கள் அதனை புலனாய்வு செய்து வருகிறோம்,” என்றும் அகமட் ஸாஹிட் சொன்னார்.
எதிர்க்கட்சிகள் மக்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக ரகசியமான அரசாங்கத் தகவல்களையும் மற்ற உணர்வுகளைத் தூண்டக் கூடிய பிரச்னைகளையும் கசிய விடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இரண்டு நீர்மூழ்கிகள் கொள்முதல் செய்யப்பட்டது தொடர்பில் மலேசியத் தரப்புக்களுக்கு பிரஞ்சுத் தற்காப்புத் தளவாடத் தயாரிப்பு நிறுவனமான டிசிஎன்எஸ் கையூட்டுக்களை கொடுத்ததாகக் கூறப்படுவது மீது அந்த நிறுவனத்துக்கு எதிராக உள்ளூர் மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் வழக்குப் போட்டுள்ளது.
நஜிப்புடன் அணுக்கமான தொடர்புகளைக் கொண்ட ஒரு நிறுவனம் டிசிஎன்எஸ்-ஸுக்கு 36 மில்லியன் யூரோவுக்கு (142 மில்லியன் ரிங்கிட்) விற்றதை பிரஞ்சு அரசு தரப்பு வழக்குரைஞர்கள் கண்டு பிடித்துள்ளதாக அண்மையில் சுவாராம் வழக்குரைஞர் ஜோசப் பிரெஹாம் தகவல் வெளியிட்டார்.
ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட தெராசிசி லிமிடெட் என்ற அந்த நிறுவனம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நெருங்கிய நண்பரான அப்துல் ரசாக் பகிந்தாவுக்கும் அவரது தந்தை அப்துல் மாலிம் பகிந்தாவுக்குச் சொந்தமானதாகும்.
அப்துல் ரசாக்கிற்குச் சொந்தமான இன்னொரு நிறுவனமான பெர்மெக்கார் பிரான்ஸில் இருக்கும் காலத்துக்காக நஜிப் ஒரு பில்லியன் அமெரிக்க டாலரைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடும் என்பதை காட்டும் தொலைநகல் தொடர்பு ஒன்றையும் பிரஞ்சுப் புலனாய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளதாகவும் சுவாராம் தகவல் வெளியிட்டுள்ளது.
நஜிப்பைச் சந்திப்பதற்கு ஈடாக அந்தப் பணம் கோரப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
பிரதமர் அந்த விவகாரம் மீது மௌனமாக இருக்கிறார். அதே வேளையில் கடற்படையும் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் கருத்துக் கூற மறுத்து விட்டனர்.