தேர்தல் ஆணையம் தனது பதிவு முறையில் காணப்படுகின்ற பிரச்னைகளைத் தீர்க்கும் வரையில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது நிறுத்தி வைக்க வேண்டும் என கோமாஸ் எனப்படும் Pusat Komunikasi Masyarakat வேண்டுகோள் விடுத்துள்ளது.
“வாக்காளர் பட்டியல் தூய்மையானதாக இல்லை என்பதால் புதிய வாக்காளர் பதிவை தேர்தல் ஆணையம் முடக்கி வைக்க வேண்டும்,” என அதன் குடியுரிமை, வாக்காளர் கல்வித் திட்டப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் அருள் பிரகாஷ் கூறினார்.
“தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. வாக்காளர் பட்டியல் மோசடி பற்றி மக்கள் மறந்து விட வேண்டும் என அது விரும்புகிறது. அது பிரச்னையைத் திசை திருப்ப முயலுகிறது,” என்றார் அவர்.
வரும் பொதுத் தேர்தலை ஒட்டி ‘கண்காணிப்போம்’ (Jom Pantau) என்னும் இயக்கத்தை கோமாஸ் தொடங்கியுள்ளது. தேர்தல் முறையில் காணப்படும் பல முறைகேடுகள் பற்றிய தகவலையும் அது இன்று வெளியிட்டது. 190க்கும் மேற்பட்ட பிரச்னைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.