சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் வாழ்க்கையில் வீசிய வாகன எண் தகடுப் பிரச்னை சாதாரண விக்கலாக முடிந்து விடும் எனத் தோன்றுகிறது.
2004ம் ஆண்டு அமைச்சரவை செய்த ஒரு முடிவின் படி எல்லா அமைச்சர்களுக்கும் இலவசமாக கார் எண் தகடு ஒன்றைப் பெறுவதற்கு உரிமை உண்டு என அடையாளம் தெரிவிக்க விரும்பாத சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
அந்த முடிவு காரணமாக லியாவ் ‘WWW15’ என்ற கார் எண் தகட்டை இலவசமாகப் பெறுகிறார். அவர் அதற்காக ஏல விலையான 24,200 ரிங்கிட் கொடுக்க வேண்டியதில்லை என அவர் விளக்கினார்.
அந்தத் தகவலை அந்தத் துறையின் தலைமை இயக்குநர் சோலா மாட் ஹசான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியது.
லியாவுக்கு மூன்று வழிகள் இருப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். அவருடைய அதிகாரத்துவ பதவிக்கு ஏற்ப அந்த எண் தகட்டை இலவசமாக ஏற்றுக் கொள்வது, ஏல விலையைக் கொடுப்பது அல்லது எண் தகட்டை நிராகரிப்பது ஆகியவை அந்த மூன்றுமாகும்.
கவர்ச்சிகரமான WWW எண் தகடுகளைப் பெறுவதற்கு பொது மக்கள் ஏலம் கேட்பதற்கான கடைசி நாளான மே 15ம் தேதியன்று WWW15 க்கான லியாவ்-வின் விண்ணப்பம் கிடைத்ததாக சோலா சொன்னார்.
WWW15 என்ற எண் தகடு அதிக ஏல விலையான 24,200 ரிங்கிட்டுக்கு லியாவுக்குக் கொடுப்பது என ஏல மதிப்பீட்டுக் குழு முடிவு செய்தது என அந்த அறிக்கை தெரிவித்தது.
வெளிப்படையான போக்கைப் பின்பற்றும் பொருட்டு வாகன எண் தகடுகளை ஏலத்தில் எடுத்தவர்களுடைய பெயர்கள் வெளியிடப்படுவதாகவும் சோலா சொன்னார்.
ஏலம் கேட்டவர்கள் தாங்கள் ஏலம் கேட்ட எண்களை யார் எடுத்தார்கள் என்பதை அறிய விரும்புவது இயல்பு என அவர் சொன்னார். நாங்கள் இதற்கு முன்னரும் ஏலத்தில் எடுப்பதில் வெற்றி கண்டவர்களுடைய பெயர்களை வெளியிட்டுள்ளோம்.”