வழக்கை தாம் ஜோடித்ததாகக் கூறப்படுவதை மூசா மறுக்கிறார்

1999ம் ஆண்டு அன்வார் இப்ராஹிம் தண்டிக்கப்பட்ட அதிகார அத்துமீறல் வழக்கில் தாமும் சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லும் சாட்சியங்களை ஜோடித்ததாக முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜெய்ன் இப்ராஹிம் கூறியுள்ள குற்றச்சாட்டை முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் மறுத்துள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டை மூசா மறுக்கும் செய்தியை பெரித்தா ஹரியான் என்ற மலாய் மொழி நாளேடு இன்று வெளியிட்டுள்ளது. அந்தக் குற்றச்சாட்டு உண்மையில் அன்வார் வகுத்துள்ள சதித் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் அவர் சொன்னதாக அந்த ஏடு கூறியது.

அம்னோவுடன் தொடர்புடைய அந்த நாளேடு தொடர்பு கொண்ட போது மாட் ஜெய்னின் குற்றச்சாட்டு குறித்து மேலும் கருத்துரைக்க மூசா மறுத்து விட்டார். அது பொய் என்றும் அதனை பெரிய பிரச்னையாக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

“அந்த வழக்கு தொடர்பான விசாரணையில் தொடக்கம் முதல் இறுதி வரையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள அந்த வழக்கு தொடர்பான சஞ்சிகைகளை வாசியுங்கள். அந்த வழக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ள வேளையில் அந்த விஷயத்தை இப்போது ஏன் எழுப்ப வேண்டும்?”

“அன்வார் வகுத்துள்ள ஏமாற்றும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியே அதுவென நான் கருதுகிறேன்.  வலைப்பதிவுகளில் வெளியிடப்படுகின்ற தகவல்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. ஏனெனில் அவை அனைத்தும் உண்மையில்லாதவை. வெறும் பொய்கள்,” என மூசா சொன்னதாக பெரித்தா ஹரியான் தகவல் வெளியிட்டுள்ளது.

“அவர் என்ன சொல்ல விரும்பினாலும் சொல்லட்டும். நான் அதைப் பற்றி அக்கறை காட்டப் போவதில்லை. அந்தக் குற்றச்சாட்டு உண்மையல்ல என்பதால் நான் அதற்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியமே இல்லை.”

முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் மீது முன்னாள்  தேசியப் போலீஸ் படைத் தலைவர் கருத்துரைத்திருப்பது இதுவே முதன் முறையாகும்.

‘மூசா, கனி தங்கள் சொந்த நன்மைக்காக ஏமாற்றினர்’

அதிகார அத்துமீறல் மீதான குற்றச்சாட்டில் முன்னாள் துணைப் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு மூசாவும் சட்டத் துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதுடன் சாட்சியங்களையும் ஜோடித்ததாக மாட் ஜெய்ன் கடந்த திங்கட்கிழமை கூறியிருந்தார்.

மூசாவும் கனியும் தங்களது சொந்த நன்மைக்காக அவ்வாறு செய்ததாகவும் அவர் சொன்னார். அன்வாருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கு ஒன்றில் புலனாய்வு அதிகாரியாக இருந்த மூசா, தேசியப் போலீஸ் படைத் தலைவராக உயர்ந்தார். அந்த வழக்கின் போது அரசு தரப்பு வழக்குரைஞர்களுக்குத் தலைமை தாங்கிய கனி, சட்டத்துறைத் தலைராகவும் உயர்ந்துள்ளார். மூசா அண்மையில் பதவி ஒய்வு பெற்றார்.

“அவர்கள் இருவருடைய நடவடிக்கைகள் காரணமாக அன்வார் எதிர்நோக்கிய ஜெயில் தண்டனை ஒர்  அநீதி என சொல்வதில் தவறு இல்லை. என்னிடம் உள்ள ஆதாரங்கள் அறிக்கைகள் அடிப்படையில் நான் என் இந்த வாதத்தை முன் வைக்கிறேன்,” என மாட் ஜெய்ன் நடப்புத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாருக்கு அனுப்பியுள்ள திறந்த மடலில் மாட் ஜெய்ன் குறிப்பிட்டுள்ளார்.