லிம் கிட் சியாங்: முஹைடினும் காலித்தும் மன்னிப்புக் கேட்க வேண்டும்

கூட்டரசு அமைச்சர்களான முஹைடின் யாசினும் முகமட் காலித் நோர்டினும் அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட ஒரே மலேசியா தார்மீக வழிகாட்டியிலிருந்து கற்றுக் கொண்டு இரண்டு சிலாங்கூர் கல்விக் கூடங்களுக்கு பிடிபிடிஎன் என்ற தேசிய உயர் கல்வி நிதிக் கடன் முடக்கப்படுவதற்கு ஆதரவு அளித்ததற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது.

‘முஹைடினும் காலித்தும் நெறியற்ற, பழி வாங்கும் எண்ணத்தைக் கொண்ட பிடிபிடிஎன் முடக்கத்தை வெளிப்படையாக அங்கீகரித்துள்ளதால் அத்தகைய அச்சுறுத்தல், கிரிமினல் நம்பிக்கை மோசடி உபாயங்களுக்காக மன்னிப்பு கோரும் நாகரீகப் பண்புகளை பெற்றுள்ளார்களா ?” என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் விடுத்துள்ள அறிக்கையில் வினவப்பட்டுள்ளது.

இது, 21 தார்மீகப் பண்புகளை உள்ளடக்கிய ஒரே மலேசியா தார்மீக வழிகாட்டியை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் தற்போது தான் வெளியிட்டுள்ளதால் அது மிகவும் முக்கியம் என அவர் சொன்னார்.

“அல்லது மற்ற ஒரே மலேசியா மாயவித்தைகளைப் போன்று ராயிஸின் ஒரே மலேசியா தார்மீக வழிகாட்டியும் கருவிலேயே மரணமடைந்து விட்டதா அல்லது 21 தார்மீகப் பண்புகள் சாதாரண மலேசியர்களுக்கு மட்டும் தான் பிஎன் அமைச்சர்களுக்கும் தலைவர்களுக்கு அல்ல என்பது தான் அர்த்தமா ?”

கல்வி விவகாரத்தில் தான் தவறு செய்வதாக பிகேஆர் ஒப்புக் கொண்டால் மட்டுமே யுனிசெல் என்ற யூனிவர்சிட்டி சிலாங்கூர், குயிஸ் என்ற சிலாங்கூர் அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவற்றுக்கான பிடிபிடிஎன் கடன் முடக்கம் ரத்துச் செய்யப்படும் என வியாழக் கிழமை துணைப் பிரதமர் அறிவித்தது பற்றி லிம் கருத்துரைத்தார்.

“பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து சிலாங்கூர் அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சியில் அம்னோவும் பிஎன்னும் நடத்தும் ஆட்டத்தில் மாணவர்களை பலிகடாக்களாக்கி யுனிசெல்லையும் குயிஸையும் தண்டிப்பது உட்பட பிடிபிடிஎன்-னில் உள்ள பொது நிதிகளை விருப்பம் போல் செலவு செய்வதற்கு அவை தங்களது தாத்தாக்கள் சொத்து என முஹைடினும் காலித்தும் எண்ணிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.” என்றார் அவர்.

லிம் திருப்பி தாக்குகிறார்

இலவசக் கல்வியை வழங்குவதற்கு பக்காத்தான் கொண்டுள்ள கடப்பாட்டை ‘சோதிப்பதற்காக’ அந்த இரண்டு சிலாங்கூர் கல்வி நிலையங்களுக்குமான கடன்கள் முடக்கப்பட்டதாக கூறிய பிடிபிடிஎன் நேற்று அந்த முடக்கத்தை மீட்டுக் கொண்டது.

தேர்ச்சி பெற்றவர்களை பல தசாப்தங்களாக அம்னோ நிராகரித்து வந்ததால் அம்னோவில் திறமையான தலைவர்கள் இப்போது இல்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளதற்கு ஏற்பவும் பிடிபிடிஎன் நாடகம் அமைந்துள்ளது என்பதையும் லிம் சுட்டிக் காட்டினார்.

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தில் ‘அரை குறையான’ அமைச்சரவையை மட்டுமின்றி பிடிபிடிஎன் கேலிக் கூத்தை அரங்கேற்றுவதற்கு ‘அரைகுறையான’ துணைப் பிரதமரையும் கல்வி அமைச்சரையும், ஏன் ‘அரைகுறையான’ உயர் கல்வி அமைச்சரையும் கூட பெற்றுள்ளது,” என அவர் சொன்னார்.

ஜுன் 7ம் தேதி ஒரே மலேசியா தார்மீக வழிகாட்டியை வெளியிட்ட போது பெர்சே 3.0ஐ சாடிய ராயிஸையும் லிம் கிண்டல் செய்தார்.

அந்தப் பேரணி முடிவில் நிகழ்ந்த வன்முறைக்கு தகவல் அமைச்சர் பெர்சே மீது பழி போட்டதுடன் நல்ல முறையில் நடந்து கொள்வதற்கு அந்த வழிகாட்டியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுமாறும் தூய்மையான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் அந்த அமைப்பையும் கேட்டுக் கொண்டார்.