நிரந்தர வசிப்பிடத்தகுதி பெற்றிருந்து பின்னர் குடியுரிமை வழங்கப்பட்ட ‘மிஸ்மா’வைத் தேடிக் கண்டுபிடிக்கும் உள்ளூர் நாளேடு ஒன்றின் முயற்சி பயன் அளிக்கவில்லை.
மலேசியாகினி, நிரந்தர வசிப்பிடத்தகுதி பெற்ற ஒருவர் வாக்காளர் ஆனதையும் பின்னர் நான்கு மணி நேரம் கழித்து மலேசிய குடியுரிமை பெற்றவராக மாறினதையும் செய்தியாக வெளியிட்டதை அடுத்து அந்த நாளேடு அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது.
சினார் ஹராபான் நாளேட்டின் செய்தியாளர்கள், வாரக் கடைசியில் ஈஜோக்கில் மிஸ்மாவைத் தேடித் தேடி ஓய்ந்து போனார்கள்.
ஏனென்றால் மிஸ்மாவின் முகவரி இணையத்தளத்தில் முழுமையாக இல்லை.இணையத்தில் உள்ள தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் தரவுத்தளத்தில் டேசா கோல்பீல்ட் என்று மட்டுமே குறிக்கப்பட்டிருக்கிறது.
“தெருப் பெயரோ வீட்டு எண்ணோ கொடுக்கப்படவில்லை.இதனால் வீட்டைக் கணடுபிடிப்பது சிரமமாக இருந்தது.
தேசிய பதிவுத்துறை(என்ஆர்டி)யில் நாளேட்டுக்குத் தெரிந்த வட்டாரமொன்று மிஸ்மாவின் வீட்டு இலக்கம் 12ஏ என்று தெரிவித்திருந்தது.
அதை வைத்தும் கண்டுபிடிப்பதும் சிரமமாகத்தான் இருந்தது.ஏனென்றால் டேசா கோல்பீட் 1-இல், மட்டும் 10 தெருக்குள் உள்ளன. பத்திலும் 12ஏ என்ற எண் உண்டு.
“அங்குக் குடியிருப்பவர்களும் உதவி செய்வதாக இல்லை.இதனால் மிஸ்மாவைக் கண்டுபிடிப்பது சிரமமாக இருந்தது”, என்றந்த நாளேட்டின் கட்டுரை கூறிற்று.
தேசியபதிவுத்துறை(என்ஆர்டி)யின் இணையப் பக்கத்தில் நிரந்தர வசிப்பிடத்தகுதி கொண்டவர் என்று குறிக்கப்பட்டவர் ஒரு வாக்காளராக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை மலேசியாகினி அம்பலப்படுத்தியதை அடுத்து மிஸ்மா விவகாரம் பிரபலமானது.
மலேசியாகினிக்கும் அதன் வாசகர் ஒருவர்தான் இந்த விசயத்தைத் தெரியப்படுத்தியிருந்தார். அவர் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த வாக்காளர் துணைப்பட்டியலில் அந்தப் பெயர் இருப்பதைக் கண்டு அதை மலேசியாகினியின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
அதன்பின் ஆகஸ்ட் 2-இல், என்ஆர்டி, இசி ஆகியவற்றின் இணையத்தளத்தைப் பார்த்தபோது மிஸ்மா வாக்காளராக பதிவாகியிருப்பது உறுதியானது.
மிஸ்மாவின் அடையாளக்கார்ட் எண்ணை(640704715238)ப் பதிந்தால் அது, அவர் நிரந்தர வசிப்பிடத்தகுதி உள்ளவர் என்பதைக் காண்பித்தது.
அதே எண்ணை இசி தளத்தில் பதிந்தபோது அவர் ஒரு புதிய வாக்காளர் எனக் காட்டியது.
அவர் ஈஜோ சட்டமன்றத் தொகுதியிலும் கோலா சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருந்தார்.
‘நான்கு மணி நேரத்தில் குடியுரிமை’
அதே நாளில்(ஆகஸ்ட் 2) பிற்பகல் மணி மூன்றுக்கு என்ஆர்டி தளத்துக்குச் சென்று பார்த்தபோது இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது-அதே மிஸ்மா இப்போது மலேசியக் குடியுரிமை பெற்றவராகக் குறிப்பிடப்பட்டிருந்தார்.
நான்கே மணி நேரத்தில் அவர் குடியுரிமை பெற்றவராக மாறியிருப்பதை என்னவென்று சொல்வது.
குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்; நிரந்தர வசிப்பிடத்தகுதி கொண்டவர்களுக்கு அந்த உரிமை கிடையாது.
பக்காத்தான் ரக்யாட் வசமுள்ள தொகுதிகளைக் கைப்பற்றும் முயற்சியாக பிஎன், இரகசியமாக வாக்காளர்களை அங்குக் கொண்டுவந்து நுழைப்பதாக மாற்றரசுக் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இதன் காரணமாகவே நிரந்தர வசிப்பிடத்தகுதி கொண்டவர்களுக்கு, அவர்கள் பிஎன்னுக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்குறுதி வாங்கிக்கொண்டு குடியுரிமை விரைந்து வழங்கப்படுவதாக மாற்றணி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
ஆனால், மிஸ்மா 29 ஆண்டுகளாக நிரந்தர வசிப்பிடத்தகுதி கொண்டவர் என்றும் அவரின் குடியுரிமை ஜனவரி 31-இல் அங்கீகரிப்பட்டது என்றும் என்ஆர்டி விளக்கம் அளித்திருந்தது.
அதன்பின் இசி, அதன் தளத்தில் அவரது வாக்காளர் விண்ணப்பம் “பரிசீலனையில் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது.
ஆனால் இரண்டுமே, மிஸ்மா பற்றிய விவரங்கள் அவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்ட ஆறு மாதகாலத்தில் புதுப்பிக்கப்படாமல் மலேசியாகினியில் செய்தி வெளிவந்த நான்குமணி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது ஏன் என்பதை மட்டும் விளக்கவில்லை.