கடற்படை ஆவணக் கசிவை போலீஸ் விசாரிக்க வேண்டும்:முன்னாள் போலீஸ் அதிகாரி

இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளதாகவும் வெளிநாடு ஒன்றுக்கு விற்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவதைப் போலீஸ் விசாரிக்க வேண்டும். அதற்கு துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் போன்ற உயர் அதிகாரி தலைமை தாங்க வேண்டும்.

இவ்வாறு மலேசியாகினியிடம் கூறிய முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜைன் இப்ராகிம், 2006-இல், மங்கோலிய பெண் அல்டான்துன்யா கொலையுண்டபோதே அந்த விசாரணை தொடங்கியிருக்க வேண்டும் என்றார்.

இரகசியத் தகவல்கள் வெளியில் கசிவது தெரிந்தால் அது எப்படி வெளியாகிறது என்பதைக் கண்டுபிடிக்க போலீஸ் தானாகவே முனைய வேண்டும்.

“புகார் செய்யப்படும்வரை அவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை”, என்று அந்த முன்னாள் போலீஸ் உயர்அதிகாரி கூறினார்.

மாட் ஜைன் தம்மை அதிகமாக வெளியில் காண்பித்துக்கொள்வதில்லை.பாதுகாப்புக் காரணங்களுக்காக தம் முழு உருவப்படம் எடுக்கப்படுவதைக்கூட அவர் விரும்புவதில்லை.

மே 31-இல்,பெங்கோக்கில், சுவாராமின் பிரெஞ்ச் வழக்குரைஞர் ஜோசப் ப்ரேஹம், பிரெஞ்ச் நிறுவனமொன்று ஸ்கோர்பியன் நீர்மூழ்கி பற்றிய மதிப்பீட்டு அறிக்கையை வாங்கியதாகவும் அதற்காக தெராசாசி(ஹாங்காங்)லிமிடெட்டுக்கு 36மில்லியன் யூரோ(ரிம142மில்லியன்) கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட தெராசிசி லிமிடெட் என்ற அந்த நிறுவனத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நெருங்கிய நண்பரான அப்துல் ரசாக் பகிண்டாவும்(வலம்) அவரின் தந்தை அப்துல் மாலிம் பகிண்டாவும் இயக்குனர்களாவர்.

ஆனால், அப்படிப்பட்ட விற்பனை நடக்கவே இல்லை என்று தற்காப்பு அமைச்சர் அஹ்மட் ஜாஜிட் ஹமிடி மறுத்ததாக பெரித்தா ஹரியான் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது.

அது பற்றிக் கருத்துரைத்த மாட் ஜைன், அதை விசாரிக்கும் அதிகாரம் அமைச்சருக்கு இல்லை என்றார்.விசாரணை செய்வதும் அப்படியொரு விற்பனை நடந்ததா இல்லையா என்பதை அறிவிப்பதும் போலீசின் வேலையாகும்.

போலீஸ் விசாரணை காலிட் (இடம்) தலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறுவதற்கும் ஒரு காரணமுண்டு. 2009-இல், 36வயது இந்தோனேசிய பணிப்பெண் கொலை மீதான விசாரணைக்கு அப்போது துணை ஐஜிபி-ஆக(இப்போது ஐஜிபி)இருந்த இஸ்மாயில் தலைமையேற்றிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

“இந்தோனேசிய பணிப்பெண்ணைவிட 28மில்லியன் மலேசியர்களின் பாதுகாப்பும் நாட்டின் பாதுகாப்பும் முக்கியமானவை அல்ல என்று ஐஜிபியும் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேனும் நினைக்கிறார்களா?”, என்றவர் வினவினார்.

“பணத்தாசை பிடித்த துரோகிகளால் உயர் பாதுகாப்பு இரகசியங்கள் விற்கப்பட்ட விவகாரத்தில் ஹிஷாமுடின் (இடம்) மெளனமாக இருப்பது ஏன்?

“ஹிஷாமுடின் பெர்சே வீடியோ காட்சிகள் பற்றிப் பேசுவதை விடுத்து மக்களின் பாதுகாப்புமீது கவனம் செலுத்துவது நல்லது”, என்றாரவர்.

அந்த விவகாரம் அம்பலமானது மலேசியர்களுக்குப் பெருத்த அவமானமாகும் என்பதை பிரதமர் நஜிப்பும் ஹிஷாமுடினும் உணர வேண்டும் என்றார்.

“பிரான்சிலும் மங்கோலியாவிலும் தாய்லாந்திலும் இப்போது மால்டாவிலும் உலக முழுவதுதிலுமே நம் பாதுகாப்பு இரகசியம் விற்கப்பட்டதுதான் பேச்சாக உள்ளது.ஆனால், அமைச்சரவை மட்டும் வேறு எதிலோ கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது”.

கண்மூடித்தனமான விசுவாசம் தேவையில்லை

ஐஜிபி அரசாங்கத்துக்கு விசுவாசமாக இருத்தல் முக்கியமா என்று வினவியதற்கு போலீஸ் படை அரசாங்கத்துக்கு விசுவாசம் அதுவும் கண்மூடித்தனமான விசுவாசம் காண்பிக்க வேண்டும் என்று போலீஸ் சட்டத்தில் எங்கும் சொல்லப்படவில்லை என்று மாட் ஜைன் கூறினார்.

இன்னும் சொல்லப்போனால், யார் அரசாங்கத்தை நடத்துவது, எந்தக் கட்சி ஆட்சியில் உள்ளது என்பதைப் பற்றியெல்லாம் போலீஸ் கவலைப்படக்கூடாது.

“ஐஜிபி என்பவர் உள்துறை அமைச்சருக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் பொறுப்பானவர்.

“விசுவாசம் இருக்க வேண்டியதுதான்.ஆனால், கண்மூடித்தனமான விசுவாசம் வேண்டியதில்லை.ஓர் அமைச்சரே குற்றம் புரிகிறார் என்றால் அவரைக் கைது செய்யத்தான் வேண்டும்.

“போலீஸ் சட்டத்தில் எந்த இடத்திலும் போலீஸ் படையும் ஐஜிபியும் அரசாங்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை”, என்றார் மாட் ஜைன்.

தேர்தல் தேதி பற்றியோ, நாடாளுமன்றம் கலைக்கப்படுவது பற்றியோ அது கவலைப்பட வேண்டியதில்லை.போலீஸ் பாகுபாடு காட்டாது நடந்துகொள்ள வேண்டும், சுதந்திரமாக செயல்பட வேண்டும்.