பெர்சே 3.0 ஆதரவாளர்கள், ‘கலவரத்தில் ஈடுபட்டதுடன் முரட்டுத்தனமாகவும் வன்முறையாகவும் நடந்து கொண்டதால் அவர்களுக்கு ஒரே மலேசியா தார்மீக வழிகாட்டி கொடுக்கப்பட வேண்டும் என நகைச்சுவையாக கூறியுள்ள தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திமை பெர்சே சாடியுள்ளது.
ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே பேரணியை விசாரிப்பதற்கு அரசாங்கம் நியமித்த குழு தனது பணியை முடிப்பதற்கு முன்னரே பாரபட்சமான ஒர் அறிக்கையை அமைச்சர் ஒருவர் வெளியிட முடியும் என்பதற்கு அது இன்னொரு சிறந்த எடுத்துக்காட்டு என பெர்சே குறிப்பிட்டது.
“அது பெர்சே 3.0ல் பங்கு கொண்ட 250,000 மலேசியர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள அவமானமாகும். அத்தகைய கூற்றுக்கள் நிறுத்தப்பட வேண்டும்.”
“அத்துடன் அவரது அறிக்கையும் முரண்பாடானது. காரணம் பொது மக்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்ட போலீஸ்காரர்கள் பற்றி அவர் எதுவுமே சொல்லவில்லை,” என பெர்சே வழிகாட்டல் குழு நேற்று விடுத்த அறிக்கை கூறியது.
இந்த வாரம் ஒரே மலேசியா தார்மீகப் பண்புகள் பற்றிய புத்தகத்தை வெளியிட்ட போது ராயிஸ் அவ்வாறு கூறியிருந்தார்.
பெர்சே 3.0 விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கும் ஹனீப் ஒமார் கூட தமது நியமனத்துக்கு முன்னதாக கம்யூனிஸ்ட்கள் பெர்சே-க்குள் ஊடுருவி இருப்பதாக பாரபட்சமான கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அந்தக் குழு தனது விசாரணையை முடிப்பதற்கு முன்னதாக பெர்சே 3.0 மீதான அரசாங்க வீடியோவை வெளியிடும் உள்துறை அமைச்சின் திட்டத்துக்கு அங்கீகாரம் அளித்ததின் மூலம் குழுத் தலைவர் என்ற முறையில் அந்த முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் தமது நம்பகத்தன்மையை விட்டுக் கொடுத்து விட்டார் என்றும் பெர்சே குறிப்பிட்டது.
அது போன்ற நடவடிக்கைகள் பிரச்னையை “ஊடகங்கள் வழி விசாரணை நடத்துவதற்கு” வழி வகுத்து குழுவின் எண்ணம் மீது தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்றும் அது தெரிவித்தது.
“இது உள்துறை அமைச்சு நியமித்த, ஹனீப் வழி நடத்தும் குழுவின் நேர்மை, தகுதி குறித்து மீண்டும் கேள்வி எழுப்புகிறது,” எனவும் அந்தக் குழு குறிப்பிட்டது.
என்றாலும் அந்த வீடியோவை ஒளிபரப்பப் போவதாக பல முறை அறிவித்த போதிலும் அதனை பொது மக்கள் பார்ப்பதிலிருந்து நிறுத்தி வைத்து குழுவிடம் அதனை ஒப்படைக்க உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இறுதியில் முடிவு செய்துள்ளதாக அந்த கூட்டமைப்பு குறிப்பிட்டது.
எது எப்படி இருந்தாலும் சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் முன்மொழிந்துள்ள மற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கப் போவதாக அது குறிப்பிட்டது. காரணம் “பொது மக்களுக்கு நம்பகமான, சுயேச்சையான, பாரபட்சமில்லாத விசாரணை” தேவை என அது கூறியது.
அம்பிகா அரசாங்கத்தின் மீது எதிர்வழக்குப் போட்டுள்ளார்
இதனிடையே பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தமது அரசமைப்பு உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு அரசாங்கத்தின் மீது எதிர்வழக்குச் சமர்பித்துள்ளார்.
அரசாங்கம் விசாரணைக் குழு பணியைத் தொடங்குவதற்கு முன்பே பெர்சே 3.0 பேரணியின் போது ஏற்பட்ட சேதங்களுக்கும் ‘கவனக் குறைவாக நடந்து கொண்டதற்காகவும்’ மொத்தம் 122,000 ரிங்கிட் கோரி 10 பெர்சே வழிகாட்டல் குழு உறுப்பினர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது.
கோலாலம்பூரில் குந்தியிருப்புப் பேரணியை தடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளின் போது அரசாங்கம் தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக அம்பிகா தமது எதிர்வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
“தனது அமைப்புக்கள் அல்லது வேறு நிறுவனங்கள் வழி செயல்பட்ட பிரதிவாதித் தரப்பு ஏப்ரல் 28ம் தேதி டாத்தாரான் மெர்தேக்காவில் பெர்சே கூடுவதை தடுப்பதற்கு அல்லது அதனை முறியடிக்க வேண்டுமென்றே எல்லா நடவடிக்கைகளையும் எடுத்தது,” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அந்தப் பேரணியின் முடிவில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு போலீஸ் நடத்தையே காரணம். அதற்காக அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் சொன்னார்.
டாத்தாரான் மெர்தேக்காவில் பேரணி நிகழ்வதை தடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகள் அரசமைப்புக்கு உட்பட்டவையா என்றும் அம்பிகா சவால் விடுத்துள்ளார். ஏற்பாட்டாளர்கள் மீது
வழக்குப் போடுவதற்கு அமைதியாக ஒன்று கூடும் சட்டம் அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.