பெர்சே வழிகாட்டல் குழு உறுப்பினரான வேங் சின் ஹுவாட் இன்று காலையில் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் அரசியல் நோக்கம் கொண்டதல்ல என நம்பப்படுகின்றது.
காலை மணி 7.40 வாக்கில் பெட்டாலிங் ஜெயா செக்சன் 18ல் உள்ள கோயில் ஒன்றுக்கு அருகில் தாம் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளோட்டிகள் கும்பல் ஒன்று அவரைச் சூழ்ந்து கொண்டது.
ஏதோ கோளாறு நிகழ்வதாக உணர்ந்ததும் தாம் ஒட முயன்றதாகவும் ஆனால் தலையிலும் முதுகிலும் தாக்கப்பட்டதாக வோங் மலேசியாகினியிடம் சொன்னார்.
அந்த மோட்டார் சைக்கிளோட்டிகள் தம்மைத் தாக்கியதுடன் தம்மிடமிருந்து பணத்தைக் கோரியதாகவும் பைகளில் இருந்த பணத்தை கொடுத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாரும் தமக்கு உதவ முன் வரவில்லை எனத் தெரிவித்த வோங், சம்பவத்திற்குப் பின்னர் ஒரு குடும்பம் மட்டும் வீட்டுக் கதவுகளைத் திறந்ததாகச் சொன்னார்.
அந்தத் தாக்குதல் அரசியல் நோக்கம் கொண்டதல்ல எனத் தாம் நம்புவதாக பின்னர் முகநூல் பதிவில் வோங் கூறினார்
“இல்லை. அது அரசியல் நோக்கம் கொண்டதல்ல. அவர்கள் பணத்தை மட்டுமே குறியாக கொண்டிருந்தனர்,” என்றார் அவர்.
ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது போலீஸ் முரட்டுத்தனத்துக்கு இலக்கானதாக கூறிக் கொண்டுள்ள வோங், குற்றத் தடுப்பு போன்ற தங்களது வழக்கமான நடவடிக்கைகளில் போலீஸ் கடப்பாடு குறித்து கேள்வி எழுப்பினார்.
“நான் போலீஸ் வன்முறைக்கு இலக்காகியுள்ளேன். இன்று குற்றச் செயல்களைத் தடுக்க போலீஸ் தவறியதால் பாதிக்கப்பட்டுள்ளேன்.”
“குற்றச்செயல் விகிதம் கூடுவது அரசியல் ஆகும் அதே குடியிருப்புப் பகுதியில் இன்னொருவர் கொள்ளையடிக்கப்பப்பட்டதாக என்னிடம் கூறப்பட்டுள்ளது. நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யாத வேளையில் போலீசார் எங்கே போனார்கள்,” என அவர் கிண்டலாக வினவினார்.
அந்தத் தாக்குதலின் போது வோங்கிற்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சோதனை நடத்தப்பட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது.