ஒருவர் பல முறை வாக்களிப்பதைத் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் அழிக்க முடியாத மையை ‘அழுக்கு நீக்கி’ களைக் கொண்டு எளிதாக அழித்து விட முடியும் என்று கூறப்படுவதை, பல நாடுகளில் தேர்தல் பார்வையாளர்களாக பணி புரிந்துள்ளவர்கள் நம்பவில்லை.
என்றாலும் ஆப்கானிஸ்தானில் 2009ம் ஆண்டு அதிபர் தேர்தலைக் கண்காணித்த ஒங் பிகே, அந்த மை அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தன எனத் தெரிவித்தார். ஆனால் அந்த மையின் ஆற்றலைக் குறைக்கும் பொருட்டு அதில் நீர் கலக்கப்பட்டதே அதற்குக் காரணம் என்றார் அவர்.
“அந்த மை நீண்ட நேரம் இருக்காமல் இருப்பதற்கு அதில் தேர்தல் அதிகாரிகள் நீரைக் கலந்ததைத் தவிர அந்த மையைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை… ஆனால் அதுவும் ஒரு சில இடங்களில் மட்டுமே நிகழ்ந்தன. அந்தத் தேர்தலில் அது ஒரு பிரச்னையாகக் குறிப்பிடப்படவில்லை”, என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.
சுதந்திரமான தேர்தல்களுக்கான ஆசியக் கட்டமைப்புக் குழுவின் ஒர் உறுப்பினராக ஒங் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றிருந்தார். அழிக்க முடியாத மை மூலம் எழுந்த பிரச்னைகளுக்கு அமலாக்கம் பலவீனமாக இருந்ததே காரணம் ஆகும்.
“வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் அவர்களுக்கு சில அதிகாரிகள் குறியிடவில்லை என்பதையும் நான் கண்டு பிடித்தேன். அதனால் ஒருவர் பல முறை வாக்களித்த சில சம்பவங்கள் நிகழ்ந்தன.”
குடும்பத் தலைவர்கள் தங்களது புதல்வர்களுக்கும் புதல்விகளுக்கும் தாங்கள் வாக்களிப்படாகக் கூறிக் கொண்டு பல வாக்குச் சீட்டுக்களை கோரிய சம்பவங்களும் அங்கு நிகழ்ந்தன.”
மலேசிய தேர்தல் பார்வையாளர் கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக ஒங், இப்போது பணியாற்றி வருகிறார். அவர் வங்காள தேசம் உட்பட பல நாடுகளிலும் தேர்தல்களை சுயேச்சையான பார்வையாளர் என்னும் முறையில் கண்காணித்துள்ளார்.
அந்த மையின் நம்பகத்தன்மை குறித்து தான் சோதனை நடத்தியதாகவும் அதனை எளிதாக அழிக்க முடியும் என்பதைக் கண்டு பிடித்துள்ளதாகவும் ஐரோப்பாவில் இயங்கும் அடையாளம் கூறப்படாத நிறுவனம் ஒன்று கூறியதாக தி ஸ்டார் நாளேடு நேற்று தகவல் வெளியிட்டிருந்தது.
அந்த நிறுவனம் 40 நாடுகளில் 25 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டது என்றும் அந்த ஏடு குறிப்பிட்டது.
“அழிக்க முடியாத மை” எனக் குறிக்கப்பட்ட கூடு ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட மையினால் கை விரல் ஒன்றில் ஏற்பட்ட கரையை கடைகளில் விற்கப்படும் “அழுக்கு “மூலம் எளிதாக அழிக்க முடியும் என்பதை அது செய்து காட்டியதாகவும் அந்த ஏடு தெரிவித்தது.
2004ம் ஆண்டு ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலிலும் 2005ம் ஆண்டு பாலஸ்தீனத் தேர்தலிலும் அது ஒரு பிரச்னையாக இருந்தது என்றும் அது குறிப்பிட்டது.
அந்த மையை எளிதாக நீக்க முடிந்ததால் பலர் பல முறை வாக்களிப்பதைத் தடுக்க இயலவில்லை என ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் கூறியதாக டைம்ஸ் இணைய ஏடு அறிவித்தது.
“அழுக்கு நீக்கிகளை” கொண்டு பல வாக்காளர்கள் மையை அழிக்க முயன்றனர் என்றும் அதில் அவர்கள் “ஒரளவு வெற்றியும்” பெற்றனர் என்றும் கூறப்பட்டது.
“ஒரு புகார் கூட இல்லை”
ஆனால் 2004 ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் பார்வையாளராக பங்கு கொண்ட அப்துல் மாலிக் ஹுசேன், “அழிக்க முடியாத மை கறை நீக்கப்படுகிறது” என தாம் எந்தப் புகாரையும் பார்க்கவில்லை எனச் சொன்னார்.
“மக்கள் வாக்களித்த கூடாரங்களில் அந்த மை பயன்படுத்தப்படுவதை நான் பார்த்துள்ளேன். அந்த மை ஒரு நாளைக்கு இருக்கும். அதற்குப் பின்னர் அது மறைந்து விடும். ஒரே நாளில் அது போய் விடாது என நான் உறுதி கூற முடியும்,” என்றார் அவர்.
மலேசிய தேர்தல் பார்வையாளர் கட்டமைப்பின் முன்னாள் தலைவருமான மாலிக், தாம் பார்வையிட்ட தேர்தல்களில் “அழிக்க முடியாத” மை குறித்த பிரச்னைகள் எழவில்லை என்றார்.
2004ம் ஆண்டு இந்தோனிசிய, பிலிப்பீன்ஸ் அதிபர் தேர்தல்கள், இலங்கை, தாய்லாந்து, இந்தியா, வங்காள தேசம் ஆகியவற்றின் பொதுத் தேர்தல்கள் ஆகியவையும் அதில் அடங்கும்.
“இந்தோனிசியாவில் கிழக்கு சுமத்ராவில் உள்ள நில நடுக்கப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மை ஜகார்த்தாவிலிருந்து கொண்டு வரப்பட்டது. அங்கு மை ஒரு பிரச்னை அல்ல. ஊழலும், இராணுவப் படைகளின் அத்துமீறலுமே பிரச்னைகளாகும்”, என்றார் மாலிக்.
கை விரல் ரேகைப் பாதுகாப்பு முறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த அந்த ஐரோப்பிய நிறுவனம் விரைவில் தனது கண்டுபிடிப்புக்களை மலேசிய அதிகாரிகளிடம் தெரிவிக்கும் என்றும் தி ஸ்டார் கூறியது.
இதனிடையே அந்த விஷயம் பற்றி கருத்துக் கேட்பதற்காக தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்புடன் தொடர்பு கொள்ளப்பட்டது. “எந்தக் கருத்தும் இல்லை” என வெளிநாடுகளில் தேர்தல் பார்வையாளராகவும் பணியாற்றியுள்ள அவர் சொன்னார்.
பெர்சே 2.0 என்ற தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்கான கூட்டணி விடுத்துள்ள எட்டுக் கோரிக்கைகளில் அழிக்க முடியாத மையைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் ஒன்றாகும்.
13வது பொதுத் தேர்தலில் அழிக்க முடியாத மை அல்லது கைவிரல் ரேகை பதிவு முறை அல்லது இரண்டையுமே பயன்படுத்துவது மீது தான் முடிவு செய்யப் போவதாக அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.