1999-இல், அன்வார் இப்ராகிம் தனிப்பட்டவர்கள் கணக்கிலும் நிறுவனங்களின் கணக்கிலும் பல மில்லியன் ரிங்கிட்டை மாற்றிவிடுமாறு தமக்கு உத்தரவிட்டார் எனப் பொருளக தலைமை செயல் அதிகாரி(சிஇஓ) ஒருவர் ஊழல்-தடுப்பு வாரியத்திடம்(ஏசிஏ) வாக்குமூலம் அளித்தார் என்று நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியுள்ளது.
இன்று அதன் முதல்பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஒரு சிறப்பு அறிக்கையில் அந்த ஆங்கில நாளேடு, பல்வேறு வட்டாரங்களை மேற்கோள்காட்டி அன்வார் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் இருந்த காலத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்பட்டது பற்றி விசாரணை செய்த ஏசிஏ(இப்போது எம்ஏசிசி) அதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்தது எனக் கூறியுள்ளது.
ஆனால்,ஏசிஏ-யால் அந்த சிஇஓ-வை ஒரு சாட்சியாக முன்னிறுத்த முடியவில்லை.ஏனென்றால், நிதிமாற்ற உத்தரவுகள் எல்லாம் வாய்மொழியாக வழங்கப்பட்டவை, எழுத்துப்பூர்வமாக எதுவும் இல்லை.
ஓராண்டு விசாரணைக்குப் பிறகு விசாரணை கைவிடப்பட்டதாகவும் அந்நாளேடு கூறியது.
ரீபோர்மாசி இயக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில், பேங்க் நெகாரா உதவி ஆளுனர் அப்துல் மூராட் காலிட், துணைப்பிரதமராக இருந்தபோது அன்வார் சொத்துகளாகவும் பங்குப்பத்திரங்களாகவும் ரொக்கமாகவும் ரிம3பில்லியன் பெறுமதியுள்ள 20 வங்கிக் கணக்குகளை வைத்திருந்தார் என சத்திய பிரமாணம் ஒன்றில் கூறியதை அடுத்து அந்த விசாரணை தொடங்கியது.
பேங்க் நெகாரா அதிகாரிகளுடன் ஏசிஏ விசாரணையைத் தொடங்கியது.அந்த விசாரணையில் விர்ஜினியா ஐலன்ஸில்(Virgin Islands)ஒரு வங்கி கணக்கு இருப்பதும் அதில் ரிம3பில்லியன் இருப்பதும் தெரியவந்தது.
அது தவிர தனிப்பட்ட பலரிடமும் பல நிறுவனங்களிடமும் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவர்களிடமுள்ள பணத்துக்கும் அன்வாருக்கும் தொடர்பிருப்பது தெரிய வந்தது.
ஆனால், விசாரணைகளை மேற்கொண்டு தொடரமுடியாதபடி ஒரு தடையும் எதிர்ப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.பணம் மாற்றப்பட்டதன் தொடர்பில் எழுத்துப்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை.
இதன் தொடர்பில் கருத்துரைத்த எம்ஏசிசி விசாரணை அதிகாரி முஸ்தபார் அலி, புதிதாக குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் கிடைத்தால் அந்த வழக்கை மறுபடியும் விசாரிக்கலாம் என்றார்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் கொள்கை என்னவென்றால்,அரசு வழக்குரைஞர்கள் மேற்கொண்டு விசாரணை இல்லை என்று முடிவுகட்டிய வழக்குகள் மட்டும் மறுவிசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டா என்றும் அவர் தெரிவித்தார்.