என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் பற்றி பிகேஆர் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள குறும்படம் நகைச்சுவையானதாக இருக்கும் என அந்தக் கட்சியின் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறுகிறார்.
அதற்கு இயக்குநராகப் பணியாற்றவிருக்கும் திரைப்படத் தயாரிப்பாளர் ஹிஷாமுடின் ராயிஸுடன் தாம் அது குறித்து விவாதித்து வருவதாகவும் அவர் சொன்னார்.
அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் சம்பந்தப்பட்ட ஊழலில் முன்னாள் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஈடுபாட்டை அந்தத் திரைப்படம் சித்தரிக்கும் என ராபிஸி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.
ஷிஷாமுடின் பல உயர் கல்விக் கூடங்களில் திரைப்படத் தயாரிப்பைக் கற்றுக் கொடுத்துள்ளார். அத்துடன் மாணவர் பிரச்னைகளிலும் அவர் தீவிர அக்கறை காட்டி வருகிறார். தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே-யிலும் சம்பந்தப்பட்டுள்ளார்.
மிகவும் சூடாக விவாதிக்கப்பட்ட அந்த என்எப்சி பிரச்னைகளை வெள்ளித் திரையில் காட்டப் போவதாக ராபிஸி கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று செராமா ஒன்றில் அறிவித்தார்.
“என்னைப் பொறுத்த வரையில் அரசியலில் செராமா என்பது கடுமையான விஷயமாகும்.”
“அரசியல் செராமாவைக் காட்டிலும் அதிகமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.”
“அரசியலில் கலை அம்சமும் இணைய வேண்டும்,” என அவர் பங்சார் உத்தாமா இணைய வானொலிச் சேவைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
“அந்தத் திரைப்படம் 45 நிமிடங்களுக்கு ஒடும். அதில் நகைச்சுவையும் கலை அம்சங்களும் நிறைந்திருப்பதை நாங்கள் உறுதி செய்வோம். அதில் அதிகமான அரசியல் செய்திகள் இருக்க மாட்டா.”
“நடிகர்களைப் பொறுத்த வரையில் ஹிஷாமுடினுடைய தேர்வுக்கு நான் விட்டு விடுகிறேன்,” என்றார் ராபிஸி.
அந்தத் திரைப்படம் தொடர்பில் சட்ட ரீதியாக சில ஆபத்துக்கள் இருக்கலாம் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.
“என்றாலும் அதில் அவதூறு அம்சங்கள் கலந்துள்ளதாக சில தரப்புக்கள் கருதுவதை அது பொறுத்துள்ளது. அந்தத் திரைப்படம் உண்மையான விவரங்கள் அடிப்படையில் இருப்பதை நாங்கள் துல்லிதமாக ஆய்வு செய்வோம்.”
அம்னோ மகளிர் பிரிவுத் தலைவியுமான ஷாரிஸாட், ராபிஸிக்கும் பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவி சூராய்டா கமாருதினுக்கும் எதிராக அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்ட ஷாரிஸாட் மீது எதிர் வழக்குப் போட்டுள்ளனர்.
கடந்த மாதம் என்எப்சி ராபிஸி மீது இரண்டாவது வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.