45க்கு மேற்பட்ட ஆவி வாக்காளர்கள் குறித்து குடியிருப்பாளர்கள் புகார்

கம்போங் பாண்டான் குடியிருப்பாளர்கள் தங்கள் வட்டாரத்தில் அடையாளம் தெரியாத 45-க்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக போலீசில் புகார் செய்துள்ளனர்.

அம்பாங் போலீஸ் மாவட்டத் தலைமையகத்துக்கு வெளியில்  கம்போங் பாண்டான் முன்னாள் கிராமத் தலைவரான அர்ஷாட் அஹமட்(வலம்)டைச் சந்தித்தபோது அவர், தம் வீட்டு முகவரியில் 19 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்ததாகக் குறிப்பிட்டார்.நால்வர் மட்டுமே கொண்டது அவரது குடும்பம்.

மற்ற 15பேரின் பெயர்கள் தமக்குத் தெரியாதவை, தாம் கேள்விப்படாதவை என்றாரவர்.

“2008ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இல்லை.அவர்கள் யார் என்பது புதிராக உள்ளது”, என்றார்.

அவருடன் சேர்ந்து புகார் செய்த மற்றொருவர் கம்போங் பாண்டான் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழு(ஜெகேகேகே)த் தலைவர் மஹாடி அப்துல் ரஷிட்.லோரோங் கெமாஜுவானில் 30பேர் வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டிருப்பது குறித்து அவர் ஐயப்பாடு கொண்டிருக்கிறார். ஏனென்றால்  .அவர்களின் முகவரியைக் கொண்ட வீடுகளே அங்கில்லை.

இப்போது அங்குள்ள குடியிருப்பாளர்கள் அச்சம் கொண்டிருக்கிறார்கள். அடையாளம் தெரியாத பேர்வழிகள் தங்கள் முகவரிகளைப்  பயன்படுத்தித் தப்பான செயல்களில் ஈடுபடலாம் என்று கவலைப்படுகிறார்கள்.

கம்போங் பாண்டான், செம்பாகா சட்டமன்றத் தொகுதியின்கீழ் வருகிறது.அதன் சட்டமன்ற உறுப்பினர் இஸ்கண்டர் சமட்.மாற்றரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.அதே வேளை பாண்டான் நாடாளுமன்றத் தொகுதிக்கு எம்பியாகஇருப்பவர் மசீச முன்னாள் தலைவர் ஒங் தி கியாட்.

போலீஸ் புகார் செய்யப்பட்டபோது உடன் இருந்த இஸ்கண்டர், அண்மையில் கம்போங் பாண்டானில் தம் சேவை மையம் வாக்காளர்களைச் சரிபார்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டபோது கவலைதரும் பல விசயங்களைக் கண்டறிந்ததாகக் குறிப்பிட்டார்.

“கம்போங் பாண்டானில் மட்டும் மூன்று சாலைகளில் அடையாளம் தெரியாத 300பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்”, என்றவர் கூறினார்.

செம்பாகா தொகுதி முழுக்க 8,000புதிய வாக்காளர்கள் வந்திருப்பதாக அவர் சொன்னார். 2008-இல் 32,000ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை இப்போது 40,000ஆகியுள்ளது.இவர்களில் பலர் அவர்களின் பெயர்களில் பதிவாகியுள்ள முகவரிகளில் குடியிருக்கவில்லை.

“இந்தச் சந்தேகத்துக்குரிய வாக்காளர்களால் என்னுடைய பகுதியில் தேர்தல் முடிவு பாதிக்கப்படலாம் என்று கவலை கொள்கிறேன்”, என்றவர் கூறினார்.

குடியிருப்பாளர்களும் இஸ்கண்டரும் போலீஸ் நிலையத்துக்கு வெளியில் ஆவி வாக்காளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பதாகைகளை ஏந்தி நின்றனர்.தேர்தல் ஆணையம்(இசி) ஒரு மாதத்துக்குள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

இசி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சந்தேகத்துக்குரிய வாக்காளர்களின் பெயர் பட்டியலை கம்போங் பாண்டானில் இரண்டு கவுன்சிலர் அலுவலகங்களிலும் ஜெகேகேகே அலுவலகத்திலும் காட்சிக்கு வைக்கப்போவதாக இஸ்கண்டர் தெரிவித்தார்.

“பெயர் பட்டியலில் உள்ளவர்கள் எப்படி அந்த முகவரிக்கு வந்தார்கள் என்பதைக் கூறினால் அவர்களுக்கு ரிம50 அன்பளிப்பு வழங்குவோம்”.

பாஸ் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் அந்நடவடிக்கை கிராமவாசிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு  செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.