வாக்காளர் பட்டியலில் ஒரே பெயரையும் ஒரே முகவரியையும் கொண்டுள்ள இரண்டு வாக்காளர்கள் உண்மையில் இரண்டு தனிநபர்கள் என இசி என்ற தேர்தல் ஆணையம் கூறுகிறது.
தேசியப் பதிவுத் துறையில் சோதனை செய்த பின்னர் அது அவ்வாறு தெரிவித்துள்ளது.
அவர்களுடைய பெயர்களையும் முகவரிகளையும் பதிவு செய்யும் போது ஏற்பட்ட தவறுகளினால் அந்தக் குழப்பம் நிகழ்ந்துள்ளது என இசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வோங் வாய் செங் என்ற பெயரைக் கொண்ட இரண்டு வாக்காளர்கள் (800411085535, 871008085525)பெளாஞ்சா சட்டமன்றத் தொகுதியிலும் பாரிட் நாடாளுமன்றத் தொகுதியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இசி இணையப் புள்ளிவிவரக் களஞ்சியத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் தெரிய வந்தது. அவர்கள் தாமான் ஸ்ரீ அராவில் ஒரே வீட்டு எண்ணையும் கொண்டிருந்தனர்.
வான் முகமட் ஜாம்ரி பின் வான் அகமட் ((RF162733, RF162584) என்ற பெயரைக் கொண்ட இரண்டு வாக்காளர்கள் குவாங் போலீஸ் நிலையத்தில் அஞ்சல் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த இடம் குவாங் சட்டமன்றத் தொகுதியையும் சிலாயாங் நாடாளுமன்றத் தொகுதியையும் சார்ந்தது.
ஆனால் இசி-யின் இணைய புள்ளி விவரக் களஞ்சியத்தை சோதனை செய்த போது RF162584 அடையாளக் கார்டு எண்ணின் உரிமையாளர் குறித்து இரண்டு மாறுபட்ட விவரங்கள் தெரிய வந்தன.
‘Sistem Semakan Pemilih Bagi Isi Rumah’ என்னும் முறையைப் பயன்படுத்தி சோதனை செய்த போது
RF162733, RF162584 ஆகிய இரண்டு எண்களும் வான் முகமட் ஜாம்ரி பின் வான் அகமட் என்பவருக்கு சொந்தமானவை எனத் தெரிய வந்தது.
ஆனால் ‘Semakan Daftar Pemilih’ என்ற வழியைப் பயன்படுத்தி சோதித்த போது that RF162584 என்ற எண் அதே குவாங் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த இன்னொரு போலீஸ்காரருக்கு- ஸாய்சுல் ஜாம்ரி பின் ஜைனுடினுக்குச் சொந்தமானது என்பது தெரிந்தது.
ஒரே மாதிரியாக உள்ள அந்த எண்களை அரசியல் ஆய்வாளாரான ஒங் கியான் மிங் கடந்த வாரம் வெளியிட்டார்.
அவர், வாக்காளர் பட்டியலில் காணப்படும் குளறுபடிகள் குறித்த விவரங்களை தேர்தல் சீர்திருத்தப் போராட்ட அமைப்பான பெர்சே-க்கு வழங்கி வரும் மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வுத் திட்டத்தின் இயக்குநரும் ஆவார்.
அந்த நான்கு வாக்காளர்களும் தனிநபர்கள்
கடந்த வாரம் மலேசியாகினி அது குறித்து இசி-யிடம் விளக்கம் கோரியிருந்தது. அதற்கு பதில் அளித்த இசி அதிகாரி (அவர் அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பவில்லை) அந்த நான்கு வாக்காளர்களும் செல்லத்தக்க அடையாளங்களைக் கொண்ட தனிநபர்கள் எனத் தெரிவித்தார்.
உண்மையில் ஒரு வோங் வாய் வெங் இன்னொரு முகவரியில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.
“அவர்கள் இரண்டு வெவ்வேறான மனிதர்கள். அவர்களுக்கு எப்படி ஒரே முகவரி வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. உண்மையில் ஒருவர் தாப்பாவில் இருக்க வேண்டும். இன்னொருவர் பாரிட்டில் இருக்க வேண்டும்,” எனக் குறுஞ்செய்தியில் அந்த இசி அதிகாரி கூறினார்.
RF162584 என்ற அடையாளக் கார்டு எண்ணைக் கொண்டுள்ளவரின் பெயர்க் குழப்பம் பற்றிக் குறிப்பிட்ட அது தவறு என்பதை ஒப்புக் கொண்ட அவர். ஸாய்சுல் ஜாம்ரி பின் ஜைனுடின் என்பதே சரியான பெயர் என்றார்.