மலேசியாகினி ஏற்பாடு செய்யும் முதலாவது விவாதத்தில் ( Debatkini ) நால்வர் பங்கு கொள்வர்

மலேசியாகினி முதன் முறையாக ஆங்கிலத்தில் விவாதம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறது. அதில் நான்கு பிஎன்,  பக்காத்தான் ராக்யாட் அரசியல்வாதிகள், நாடு எதிர்நோக்கும் அவசர அவசியமான பிரச்னைகள் பற்றிய தங்கள் கருத்துக்களை எடுத்துரைப்பர்.

அடுத்த செவ்வாய்க்கிழமை நிகழும் அந்த விவாதத்தின் தலைப்பு ‘மலேசிய ஜனநாயகம் முன்னோக்கிச் செல்கிறதா ?” ( Is Malaysian democracy moving forward?) என்பதாகும்.

ஆளும் பிஎன் கூட்டணியைச் சார்ந்த இருவரும் எதிர்த்தரப்பு பக்காத்தானைச் சேர்ந்த இருவரும் பங்கு கொள்கின்றனர்.

அப்துல் ரஹ்மான் டஹ்லான் (அம்னோ) கான் பிங் சியூ (மசீச), முஜாஹிடின் யூசோப் ராவா(பாஸ்), ஆர் சிவராசா (பிகேஆர்) ஆகியோரே அந்த நால்வரும் ஆவர்.

கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபத்தில் நடைபெறும் அந்த விவாதத்திற்கான பதிவு இரவு மணி 7.30க்குத் தொடங்கும்.

90 நிமிடங்களுக்கு நிகழும் அந்த விவாதத்திற்கு மலேசியாகினி தலைமை நிர்வாகி பிரமேஷ் சந்திரன் அனுசரணையாளராக இருப்பார்.

மலேசியாகினி இணையத் தளம் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு மேல் இணையச் செய்தித் தொழிலில் ஈடுபட்ட பின்னர் நேரடியான பொது விவாதம் ஒன்றை நடத்துவதற்குக் காலம் கனிந்து விட்டதாக சந்திரன் சொன்னார்.

“நாகரீகமான முறையில் கருத்துக்களை பரிமாறிக் கொள்வது மலேசியாவின் ஜனநாயக நடைமுறைக்கு தூண்டுகோலாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.”

“அரசியல் எப்போதும் பகைமையாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை. போட்டி அரசியல் சக்திகளுக்கு இடையில் அறிவு சார்ந்த நிலையிலான கலந்துரையாடல், இன ரீதியாக ஒன்று கூடுவதைத் தவிர்த்து கொள்கைகள் மீது கவனம் செலுத்த வழி வகுக்கும்,” என்றார் சந்திரன்.

மலேசியாகினி, கடந்த சில மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் சீன மொழியில் விவாதங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஆங்கில மொழியில் அது விவாதத்திற்கு ஏற்பாடு செய்வது இதுவே முதன் முறையாகும். மலாய் மொழியிலும் விரைவில் விவாதத்திற்கு ஏற்பாடு செய்யப்படும்.

விவாதத்தில் கலந்து கொள்கின்றவர்கள் பேச்சாளர்களிடம் எழுத்துப்பூர்வமாக  கேள்வி எழுப்பலாம்.
கேள்விகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

செலவுகளை ஈடு கட்டுவதற்காக 10 ரிங்கிட் நுழைவுக் கட்டணம் விதிக்கப்படும். மண்டபத்தில் டிக்கெட்டுக்களை வாங்க இயலும் என்றாலும் மலேசியாகினியில் முன் கூட்டியே டிக்கெட்டுக்களுக்குப் பதிவு செய்கின்றவர்களுக்கு மூன்று ஸுனார் கேலிச் சித்திரப் புத்தகங்களை வெல்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.

மறக்க வேண்டாம். ஜுன் 19ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு மனி 7.30 கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசெம்பிளி மண்டபம் மலேசியாகினி ஏற்பாடு செய்யும் முதலாவது விவாதம் ( Debatkini )