‘டேனியருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மிகைப்படுத்தப்பட்டவை’

பிரதமருடைய எதிர்கால மருமகன் டேனியர் நஸர்பயேவ் மீது அண்மையில் சுமத்தப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் ‘மிகைப்படுத்தப்பட்டவை’. அதற்கும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குடும்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பிரதமரின் மனைவி ரோஸ்மா மான்சோருக்கு அணுக்கமான வட்டாரம் ஒன்று கூறியது.

“அது குடும்பத்தின் அடுத்த தரப்பை மட்டுமே சம்பந்தப்படுத்துகிறது,” என அந்த வட்டாரம் குறிப்பிட்டது. அது டேனியருக்கும் நஜிப் புதல்வி நூர்யானா நாட்ஜவா-வுக்கும் இடையிலான திருமண நிச்சயதார்த்த்தை பாதிக்கவில்லை என்றும் அந்த வட்டாரம் தெரிவித்தது.

டேனியரின் மாற்றான் தந்தையான போலாட் நஸர்பயேவ் மான்ஹாட்டன் உச்ச நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்பித்துள்ளதாக செவ்வாய்க்கிழமையன்று நியூயார்க் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டது பற்றி அந்த வட்டாரம் கருத்துரைத்தது.

டேனியர் தமது மாற்றான் தந்தையிடமிருந்து ( step-father ) 20 மில்லியன் டாலர் (62 மில்லியன் ரிங்கிட்) பெறும் ஆடம்பர அடுக்கு மாடி வீடு ஒன்றை மோசடி செய்ததுடன் போலிப் பத்திரங்களைப் பயன்படுத்தி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளதாகவும் மான்ஹாட்டன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.

தாம் கஸக்ஸ்தான் உயர் நிலைப் பள்ளிக் கூடம் ஒன்றில் தேர்ச்சி பெற்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் டேனியர் ஆவணங்களை போலியாக தயாரித்ததாகவும் அந்த நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிப்பதாக நியூயார்க் போஸ்ட் ஏட்டில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அவர் ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஒர் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்துள்ளார். ஆனால் அவர் தமது படிப்பை முடிக்கவில்லை.

அந்த வழக்கு டேனியர், அவரது தாயாரான மைரா நஸர்பயேவ், மைராவின் முன்னாள் கணவரான போலாட் நஸர்பயேவ் ஆகியோருக்கு இடையிலான தகராறு சம்பந்தப்பட்டதாகும் என்றும் அந்த வட்டாரம் கூறியது.

போலாட், கஸக்ஸ்தான் அதிபர் நுருசுல்தான் நஸர்பாயேவ்-வின் சகோதரரும் ஆவார்.

அத்துடன் நியூயார்க் போஸ்ட்டில் வெளியான டேனியர் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்குள் அவர் மோசடி செய்து சேர்ந்தார் என்ற குற்றச்சாட்டும் நூர்யானா நாட்ஜ்வாவைக் கவருவதற்காக டேனியர் அவ்வாறு செய்தார் என்ற தோற்றத்தைத் தரும் வகையில் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரம் குறிப்பிட்டது.

பெர்னாமா தகவலின் படி அவர்கள் இருவரும் அமெரிக்காவில் கல்வி கற்ற போது சந்தித்தனர்.

என்றாலும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதால் அது குறித்து மேலும் கருத்துரைக்க அந்த வட்டாரம் மறுத்து விட்டது.

ரோஸ்மா நேற்றிரவு தொடக்கி வைத்த Pertubuhan Kebajikan Insaniah Srikandi என்னும் அரசு சாரா அமைப்பின் தொடக்க விருந்து நிகழ்வில் அந்த வட்டாரத்துடன் மலேசியாகினி உரையாடியது.

கோலாலம்பூர் செத்தியாவாங்சாவில் நடைபெற்ற அந்த நிகழ்வில் மலாக்கா முதலமைச்சர் முகமட் அலி ரூஸ்தாம், விவசாய அமைச்சர் நோ ஒமார், பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லான் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.