மலேசியத் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பின்(எப்எம்எம்) தலைவர் யோங் போ கோன், குறைந்தபட்ச சம்பளத்திட்டம் சரியான முறையில் அமலாக்கம் செய்யப்படவில்லை என்று குறைகூறுகிறார்.அது பற்றித் தயாரிப்பாளர்களுக்குத் தெளிவாக விளக்கப்படவில்லை.
“அதை அமல்படுத்தும் கொள்கை சீராக இல்லை.வழக்கமாக, போதுமான அவகாசம் வழங்கப்படும்.அதற்குள் எங்களைச் சரிப்படுத்திக்கொள்வோம்.
“இப்போது, குறைந்தபட்ச சம்பளத்தில் என்னென்ன அலவன்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது எது சேர்க்கப்படவில்லை என்பதுகூட எங்களுக்குத் தெரிவில்லை”.சிலாங்கூர், பண்டார் ஸ்ரீடமன்சாராவில் உள்ள விஸ்மா எப்எம்எம்-இல் செய்தியாளர்களிடம் பேசியபோது யோங் இவ்வாறு கூறினார்.
நேற்று, மனித வள அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம், தனியார் துறைக்கு ரிம900குறைந்தபட்ச சம்பளம் ஜூலை முதல் நாள் அரசு இதழில் பதிவு செய்யப்பெற்று 2013 ஜனவரியில் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்திருந்தார்.
நிறுவனங்கள் தங்கள் சம்பளப் பட்டியலைச் சரிசெய்ய ஆறு மாதங்கள் பொதுவாக போதும்தான் ஆனாலும் சில நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் தேவை என்று நினைப்பதாக யோங் கூறினார்.
“அது(குறைந்தபட்ச சம்பளம்) பற்றிய முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை.அதுதான் சிக்கல். முழுமையான விவரங்கள் தெரியாதவரை நிறுவனங்கள் சம்பளப்பட்டியலைத் தயாரிக்க இயலாது.
குறைந்தபட்ச சம்பளத்தால், கிழக்குக்கரை மாநிலங்களில் சம்பளத்துக்கான செலவினம் 60விழுக்காடும் கிள்ளான் பள்ளத்தாக்கு நிறுவனங்களின் செலவில் 20-இலிருந்து 30விழுக்காடுவரையும் உயரக்கூடும் என்றாரவர்.
குறைந்தபட்ச சம்பளத்தால் தங்கள் தொழில்கள் “கடுமையாக பாதிக்கப்படும்” என்றே எப்எம்எம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட தொழில் அதிபர்களில் பாதிக்கு மேற்பட்டோர் தெரிவித்தனர்.
குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தால் ஒருவகை பாதிப்பு என்றால், புதிய பணி ஓய்வு சட்டவரைவு இன்னொரு வகையில் தொழில்களைப் பாதிக்கின்றது என்று யோங் குறிப்பிட்டார்.
நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அச்சட்டவரைவு தனியார்துறை ஊழியர்களின் வேலைவாய்ப்பை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கிறது.
இது, புதியவர்களை வேலைக்குச் சேர்ப்பதைத் தடுக்கும் என்றாரவர்.
எப்எம்எம் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 386பேரில், 51.5விழுக்காட்டினர் பணி ஓய்வு வயது 55ஆக இருப்பதையே விரும்புகின்றனர்.
மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே 60வயதில் பணி ஓய்வு என்பதை வரவேற்கின்றனர் என்று யோங் தெரிவித்தார்.
“பொதுவாக திறன்வாய்ந்த ஊழியர்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதை நிறுவனங்கள் உணர்கின்றன அதனால் 55வயது என்பதை 60வயதுவரை நீட்டிப்பதை அவை விரும்புகின்றன.ஆனால், திடமும் திறமையும் உள்ளவர்களுக்கு மட்டுமே பணிக்காலத்தை நீட்டிப்பது என்று அதிலும் ஒரு நெகிழ்ந்துகொடுக்கும் தன்மை தேவை என்று நினைக்கின்றன”, என்றார்.