PKFZ நீதிமன்ற சாட்சியங்கள் நெருப்பிலும் திருட்டிலும் சேதமடைந்துள்ளன

PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்துள்ள திருட்டு, தீ சம்பவங்களில் PKFZ ஊழல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீதான விசாரணைக்கு அவசியமானவை எனக் கருதப்படும் சில நீதிமன்ற சாட்சியங்கள் சேதமடைந்துள்ளன.

அந்தச் சம்பவங்கள் ஜுன் 7ம் தேதிக்கும் ஜுன் 10ம் தேதிக்கும் இடையில் நிகழ்ந்துள்ளதாக சைனா பிரஸ் நாளேடு கூறியது.

அந்தக் குற்றங்களைப் புரிந்தவர்கள் திருட்டை மறைப்பதற்காக சில மின்சாரக் கம்பிகளுக்கு தீ வைத்ததாகச் சொல்லப்படுகின்றது.

அந்தச் சம்பவங்களின் தொடர்பில் போலீசார் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட ஒரு மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மின்சாரக் கம்பிகள் தற்காலிகமாக PKFZ பகுதியில் வைக்கப்பட்டிருந்தன.

அந்தத் திருடப்பட்ட கம்பிகள் PKFZ சம்பந்தப்பட்ட கிரிமினல், சிவில் வழக்குகளுக்கு மிகவும் முக்கியமானவை என போர்ட் கிளாங் துறைமுக இயக்குநர் சொங் கீ சாய் கூறினார். PKFZ பகுதியை போர்ட் கிளாங் வாரியம் என்ற அரசாங்கத் துணை அமைப்பு நிர்வாகம் செய்து வருகிறது.

சம்பந்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு போர்ட் கிளாங் துறைமுக வாரியத் தலைவர் தே கிம் போ-வையும் போக்குவரத்து அமைச்சையும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே அந்த திருட்டும் தீ வைப்பும் அரசியல் நோக்கத்தைக் கொண்டிருக்கக் கூடிய சாத்தியத்தை கிளாங் செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் மாட் யூசோப் நிராகரித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் போதைப் பித்தர்கள் என்றும் தங்கள் பழக்கத்துக்கு செலவு செய்ய அவர்கள் அந்தக் கம்பிகளைத் திருடியதாக கருதப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.

PKFZ ஊழல் தொடர்பில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர்களான லிங் லியாங் சிக்-கும் சான் கொங் சாய்-யும் தனித்தனியாக மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளனர்.