அந்தக் குற்றச்சாட்டுக்கள் ‘அபத்தமானவை’ என டேனியரின் தாயார் நிராகரிக்கிறார்

பிரதமர் நஜிப் ரசாக்கின் எதிர்கால மருமகனான டேனியர் நஸர்பயேவ்-வின் தாயார், தமது புதல்வருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் ‘அபத்தமானவை’ என்றும் அரசியல் தில்லுமுல்லு என்றும் அவர் வருணித்தார்.

“அந்த அபத்தமான கூற்றுக்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது எனக்கும் என் கணவருக்கும் தெரியாது.”

“இது தனிப்பட்ட குடும்ப விவகாரமாகும். அரசியல் நோக்கம் கொண்ட தரப்புக்களினால் அந்த விவகாரம் தில்லுமுல்லு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது,” என மைரா நஸர்பயேவ் தமது பொது உறவுப் பேச்சாளர் வழி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமது புதல்வர் தமது மாற்றான் தந்தையான போலாட் நஸர்பயேவ்-வை 20 மில்லியன் அமெரிக்க டாலர் (62 மில்லியன் ரிங்கிட்) பெறும் ஆடம்பர அடுக்கு மாடி வீட்டை மோசடி செய்துள்ளதாக கூறும் குற்றச்சாட்டுக்கள் “முழுக்க முழுக்க உண்மையில்லாதவை” , முற்றிலும் ஆதாரமற்றவை என மைரா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“நானும் என் கணவர் போலாட்டும் எங்கள் பிள்ளைகள் மீது கடப்பாடு கொண்டுள்ளோம். நாங்கள் அந்த விவகாரத்தைத் தனிப்பட்ட முறையில் தீர்த்துக் கொள்வோம். நாங்கள் எங்களுடைய எல்லாப் பிள்ளைகளைப் பற்றியும் பெருமை கொள்கிறோம்.

“நான் அடுத்த சில வாரங்கள் ஐரோப்பாவில் குடும்பத்துடன் விடுமுறையயக் கழிக்க திட்டமிட்டுள்ளேன். நான் அந்த அமைதியான நேரத்தை என் குடும்பத்துடனும் பாசத்துக்குரியவர்களுடனும் செலவு செய்வேன்.”