சீனாவிடமிருந்து இரவல் பெறும் இரண்டு பாண்டா கரடிகளைப் பராமரிப்பதற்கு ஆகும் ரிம20மில்லியனை உள்நாட்டில் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்கச் செலவிடலாம் என விலங்குப் பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன.
பாண்டா கரடிகளை இரவல் பெற்று வைத்துக்கொள்வது அந்த இனத்தைப் பாதுகாக்க உதவப்போவதில்லை என்று கூறிய உலக காட்டுயிர் காப்புநிதி-மலேசியாவின்(WWF ) தலைமை செயல் அதிகாரி டயோனிசியஸ்,அவற்றைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவை அனுமதிக் கட்டணம் மூலமாக சரிக்கட்டிவிடலாம் என்று கூறப்படுவதையும் நம்பவில்லை.
“பாண்டா இரவல் ஒப்பந்தம் பாண்டாக்களின் வாழுமிடங்களில் அவற்றை அல்லது அங்குள்ள மற்ற உயிரினங்களைப் பாதுகாக்க உதவினால் அதை வரவேற்கலாம்.அப்படி இல்லையென்றால் அது பொதுப்பணத்தை விரயமாக்கும் முயற்சியே ஆகும்.அது வனவிலங்குப் பாதுகாப்புக்கு உதவப்போவதில்லை”, என்று நேற்று ஓர் அறிக்கையில் அவர் கூறினார்.
மலாயன் புலி,கடல் ஆமைகள், ஓராங் ஊத்தான், சுமத்ரா காண்டாமிருகம் ஆகிய உயிரினங்களைப் பாதுகாக்க நிதிஉதவி அவசரமாக தேவைப்படுகிறது என்றவர் குறிப்பிட்டார்.
அவர் கூறுவதை ஒப்புக்கொண்ட மலேசிய இயற்கைக் கழக(எம்என்எஸ்)த் தலைவர் மகெதப் முகம்மட், சுமத்ரா காண்டாமிருகம், மலாயன் புலி போன்றவை அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளதாகவும் அவற்றைப் பாதுகாக்க அவசர உதவி தேவைப்படுவதாகவும் கூறினார்.
“அப்பணத்தை தேசிய புலி பாதுகாப்புச் செயல்திட்டத்துக்குப் பயன்படுத்துவது நல்லது என்பது எம்என்எஸ்ஸின் கருத்து”, என்றார்.புலி பாதுகாப்புத் திட்ட இலக்கை அடைவதில் மலேசியா பின்தங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தனியார் அல்லது நிறுவனங்களின் நன்கொடையாக இருந்தால் பரவாயில்லை.ஆனால், பாண்டா கரடிகள் இரவல் திட்டத்துக்குப் பொதுப் பணத்தைச் செலவிடுவதாக இருந்தால் அத்திட்டத்தை மறுபரிசீலனை செய்வதுதான் நல்லது என எம்என்எஸ் கருதுவதாக அதன் அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் அவர் கூறியிருந்தார்.
அத்திட்டத்தை சஹாபாட் ஆலாம் மலேசியாவும் நேற்று சாடியிருந்தது.அது சுற்றுப்பயணிகளைக் கவரும் நோக்கம் கொண்ட ஒரு திட்டம் என்று கூறிய அந்த என்ஜிஓ, அதற்குச் செலவிடப்படும் பணத்தை மலேசிய விலங்குக் காட்சியங்களில் உள்ள விலங்குகளைப் பேணிப் பாதுகாக்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியிருந்தது..