பினாங்கு முனிசிபல் மன்றம்(எம்பிபிபி), அத்தீவின் மலைச்சரிவுத் திட்டங்கள் பற்றிப் பேசுவதற்கு முயன்ற அதன் கவுன்சிலர் ஒருவருக்கு “வாய்ப்பூட்டு” போட்டதை பினாங்கு மசீச, கண்டித்தது.
பேச்சுரிமையைத் “தடுக்கும்” டிஏபியின் பழக்கம் எம்பிபிபி-யையும் தொற்றிக்கொண்டிருக்கிறது என்று கூறிய மாநில மசீச தலைவர் டான் செங் லியாங், அதனால்தான் அது கவுன்சிலர் லிம் கா ஹுய்க்கு அவ்விவகாரம் குறித்து எதுவுக் பேசலாகாது என உத்தரவிட்டுள்ளது என்றார்.
மனத்தில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர் என்று பெயர்பெற்றுள்ள லிம், சுங்கை ஆராவில், மலைச்சரிவுத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியதைக் குறைகூறுவார் என்று அஞ்சியதால் அவரைப் பேசக்கூடாது என்று தடுத்து விட்டார்கள் என்று டான்(வலம்) குறிப்பிட்டார்.
“மாற்றுக்கருத்துக்கு வாய்ப்பூட்டு போடுவது டிஏபி-இல் சாதாரணம்.அண்மையில் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் துங்கு அப்துல் அசீசுக்கு வாய்ப்பூட்டு போட்டப்பட்டது.இப்போது லிம்முக்கு”, என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
ஒரு கவுன்சிலரைப் பேசவிடாமல் தடுப்பது ஏன் என்று வினவிய டான், இந்த “வாய்ப்பூட்டு” லிம்மை ஒரு கவுன்சிலராக வைத்திருப்பதன் நோக்கத்தையே பொருளற்றதாக்கி விடுகிறது என்றார்.
விதிமுறைகளின் காரணமாக பேச்சு தடுத்து நிறுத்தப்பட்டது
ஏப்ரல் 26-இல், முனிசிபல் மன்றக் கூட்டத்தில் லிம் பேசுவதைத் தடுத்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்ட எம்பிபிபி தலைவர் பட்டாஹியா இஸ்மாயில்,பேசப்போவதாக லிம் முன்கூட்டியே தம்மிடம் தெரிவிக்கவில்லை என்பதால் அவரது பேச்சைத் தடுக்க வேண்டியதாயிற்று என்றார்.
மன்றத்தின் மாதாந்திர முழுக்க் கூட்டத்தில் பேசுவதாக இருந்தால் 24மணி நேரத்துக்கு முன்னதாகவே அது பற்றித் தெரிவிக்க வேண்டும் என்று பட்டாஹியா கூறினார்.
“அதன்பின் அவர் மே25-இல் பேசலாமா என்று கேட்டார், முடியும் என்றேன்”, என்று பட்டாஹியா(வலம்)நேற்று கொம்டாரில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
“எங்கள் சட்ட ஆலோசகரையும் கலந்து ஆலோசித்தேன்.அவர் குறிப்பிட்ட விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதைப் பற்றிக் கருத்துரைப்பது நல்லதல்ல என்றார்.
“அதனால், கூட்டத்துக்குமுன் அவரது பேச்சின் பிரதி ஒன்றை வழங்குமாறு கேட்டிருக்கிறேன்”, என்றார்.
லிம்மிடம் தொடர்புகொண்டு பேசியபோது, அவர் தனக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டிருப்பதாக சொன்னதே இல்லை என்று மறுத்தார்.மற்றவர்கள்தான் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
பினாங்கு பிஎன் தலைவர்கள்தான் அத்தீவில் மேற்கொள்ளப்படும் மலைச்சரிவு மேம்பாட்டுப் பணிகளைப் பெரிய விவகாரமாக்கி வருகிறார்கள்.அப்பணிகளால் மலைப்பகுதிகள் அழிக்கப்படுவதாகக் கூறும் அவர்கள் அதற்கு பக்காத்தான் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கும் எம்பிபிபி-யும் அந்த மலைச்சரிவுத் திட்டங்கள் முந்தைய பிஎன் அரசால் அங்கீகரிக்கப்பட்டவை என்கிறார்கள்.
1985-இலிருந்து 2008மார்ச் வரை, 250அடி உயரத்துக்கு மேற்பட்ட குன்றுகளில் 37 திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்ததாக எம்பிபிபி கூறியது.