“போலி மை கார்டுகளுடன்” வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் பத்து வாக்காளர்களின் பெயர்களை அன்றாடம் பாஸ் இளைஞர் பிரிவு வெளியிடும்.
தேர்தல் முறையில் காணப்படுகின்ற பல்வேறு குளறுபடிகளை ஆராய்வதற்கு அரச விசாரணை ஆணையத்தை அமைக்குமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பது அதன் நோக்கமாகும்.
அத்தகைய “போலி மை கார்டுகளை” வைத்திருந்த பலரது பெயர்களை கடந்த இரண்டு மாதங்களில் தேர்தல் ஆணையம் நீக்கி விட்டது.
தேர்தல்களில் தில்லுமுல்லு செய்வதற்காக போலி மை கார்டுகளை வெளியிட்டதற்குப் பொறுப்பானவர்கள் மீது உடனடியாகக் குற்றம் சாட்டுமாறு ஜோகூர் பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் சுஹாய்சான் காயாட் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
அந்த வாக்காளர்கள் ஒவ்வொருவரும் இன்னொரு வாக்காளருடன் ஒரே மாதிரியான பெயரைப் பெற்றுள்ளனர்.
ஆனால் அவர்களுடைய மை கார்டு எண்கள் மட்டும் சிறிதளவு வேறுபட்டுள்ளது. அத்தகையவர்களுக்கு “படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள்” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அவர்கள் பெயர் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இருந்தது. ஆனால் பாஸ் அம்பலப்படுத்தியதும் அவை நீக்கப்பட்டு விட்டன.
அவர்களில் சிலருக்கு தங்கள் பதிவுகளில் முகவரிகள் கிடையாது. அந்தப் பெயர்கள் நீக்கப்படுவதற்கு தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் அவற்றை பார்க்க முடியும்.
அடையாளக் கார்டுகள் வழங்கப்பட்டதற்கான நோக்கம்
அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மை கார்டுகள் போலியானவை என பாஸ் இளைஞர் பிரிவு சந்தேகிக்கிறது. அவர்கள் தேர்தலில் இரண்டு முறை வாக்களிக்க வகை செய்வதே அவை வழங்கப்பட்டதற்கான காரணம் என அது நம்புகிறது.
எடுத்துக்காட்டுக்கு ஷோடா பிந்தி அப்துல் ரஹ்மான் என்பவருக்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மை கார்டு எண்களுடன்- 550620055800, 560620055412- வாக்காளர் பட்டியலில் இரண்டு பதிவுகள் இருந்தன.
அந்த இரண்டு பதிவுகளும் தித்திவாங்சா நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளன.
அது குறித்து பாஸ் இளைஞர் பிரிவு ஊடகங்களுக்குத் தெரிவித்ததும் இரண்டாவது பதிவான (560620055412) வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு விட்டது.
அரசாங்கத் தகவல் ஏட்டில் வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இது போன்ற 10,000க்கும் மேற்பட்ட பெயர்களை பாஸ் இளைஞர் பிரிவு கண்டு பிடித்துள்ளதாகவும் சுஹாய்சான் நிருபர்களிடம் நேற்று கூறினார்.
“அதில் சம்பந்தப்பட்டுள்ள மை கார்டுகளில் 90 விழுக்காடு போலியானவை என நாங்கள் நம்புகிறோம். போலி மை கார்டுகள் உலவுவது நாட்டுக்கு செய்யப்பட்டுள்ள பெரிய துரோகம் ஆகும். அந்தத் தில்லுமுல்லுக்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படா விட்டால் தேசியப் பாதுகாப்பு மருட்டலுக்கு இலக்காகும்.”
அந்த விவகாரத்தைத் தீர்க்குமாறு ஊடகங்கள், அரசியல் கட்சிகள், அரசு சாரா அமைப்புக்கள், செல்வாக்குடைய தனி நபர்கள், அனைத்து மலேசியர்கள் ஆகிய எல்லாத் தரப்புக்களும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் சுஹாய்சான் கேட்டுக் கொண்டார்.