வன்செயல் சார்ந்த குற்றச்செயல்களின் எண்ணிக்கையை “வேண்டுமென்றே கூட்டிச்சொல்வதாக” குறைகூறும் உள்துறை அமைச்சு ஏன் அதைப் பற்றிய விவரமான புள்ளிவிவரங்களைத் தருவதில்லை?
இவ்வாறு வினவிய பெட்டாலிங் ஜெயா உத்தாரா டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா, அதற்கான புள்ளிவிவரங்கள் 2009-இலிருந்து எம்பிகளுக்கு தாராளமாகக் கிடைப்பதில்லை என்றார். அதனால் குற்றச்செயல்கள் குறைந்திருப்பதாகக் கூறுவதை நம்புவது கடினமாக உள்ளது.
“மார்ச் மாதம் நான் கேட்டிருந்த ஒரு கேள்விக்கு கடைசிகடைசியாக ….மூன்று மாதங்களுக்குப் பிறகு (எழுத்துப்பூர்வமான) பதில் கிடைத்துள்ளது”, என்று இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் டோனி புவா கூறினார்.
“இருந்தும், பதில் முழுமையாக இல்லை. குற்றச்செயல்களின் உண்மை நிலவரத்தை அது விவரிக்கவில்லை”.
2006-இலிருந்து சிலாங்கூரில் மாவட்ட ரீதியாக நிகழ்ந்த குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் அவை என்ன மாதிரி குற்றச்செயல்கள் என்று வகைப்படுத்திக் கூறுமாறும் அவர் கேட்டிருந்தார்.
ஆனால்,“வன்முறை சார்ந்த குற்றச்செயல்களின் எண்ணிக்கையும் திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை மட்டுமே கிடைத்தது. மாவட்ட ரீதியான புள்ளிவிவரங்கள் கொடுக்கப்படவில்லை”, என்றார்.
தமக்குக் கிடைத்த “சொற்பமான தகவல்களிலிருந்து” 2010-இல் சிலாங்கூரில் 7,853ஆக இருந்த குற்றச்செயல்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டில் 8,141ஆக உயர்ந்திருப்பது தெரிய வருகிறது என்றவர் சொன்னார்.
திருட்டுச் சம்பவங்கள், 2010-இல் 31,838ஆக இருந்து 2011-இல் 36,161ஆக உயர்ந்தன.அதாவது ஓராண்டில் 11.6விழுக்காடு உயர்ந்தது.
அரசாங்கத்தின் உருமாற்றத் திட்டத்தில் தேசிய முக்கிய அடைவுநிலை பகுதிகள்(NKRA ) என்று குறிக்கப்பட்டுள்ள 7 பகுதிகளில் குற்றச்செயல் தடுப்பும் ஒன்று என்ற நிலையிலும் இவ்வாறு நேர்ந்துள்ளது.
‘தகவலளிப்பில் குழப்படி’
குடியிருப்புப் பகுதிகளில் சொந்தச் செலவில் தடுப்புகள் அமைக்கிறார்கள், சோதனைச்சாவடிகள் அமைக்கிறார்கள், காவலர்களை ஏற்பாடு செய்கிறார்கள். இருந்தும் குற்றச்செயல்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன.
“நஜிப் நிர்வாகம், நேர்முறையான தகவல்களை மட்டுமே வழங்கி அரசாங்கத்துக்கு நல்லதொரு தோற்றத்தை உருவாக்கிக் கொடுக்க முயல்வது தெளிவாக தெரிகிறது.
“பெமாண்டு(Pemandu)வும், அரசாங்கத்தைப் பற்றி நல்லதொரு கருத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக NKRA அறிக்கைகளில் குற்றச்செயல் பற்றிய புள்ளிவிவரங்களில் குழப்படி செய்கிறது”.
புள்ளிவிவரங்கள், குற்றச்செயல்களைத் தடுப்பதில் அரசாங்கம் பலவீனமாக இருப்பதைத்தான் காட்டுகின்றன என்ற டோனி புவா, புள்ளிவிவரங்கள் கொடுப்பதில் வெளிப்படைத்தன்மை தேவை என்றும் “முக்கியமான” விவகாரங்களுக்குத் தீர்வுகாண கூடுதல் முயற்சிகள் தேவை என்றும் கூறினார்.