நல்லா அன்வாருக்கு எதிராக அவதூறு அறிக்கைகளை விடுத்தார் என நீதிமன்றம் தீர்ப்பு

மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் தலைவர் எஸ் நல்லகருப்பன், 2008ம் ஆண்டு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக அவதூறான அறிக்கைகளை விடுத்தார் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நல்லகருப்பனுடைய வாதத்தை தள்ளுபடி செய்யுமாறு அன்வார் சமர்பித்த விண்ணப்பத்தை அனுமதித்த பின்னர் நீதிபதி சூ ஜியோக் இயாம் அந்த தீர்ப்பை தமது அறையில் வழங்கினார்.

அன்வாருக்குச் செலவுத் தொகையையும் இழப்பீடுகளையும் கொடுக்குமாறும் நீதிபதி செனட்டருமான நல்லகருப்பனுக்கு ஆணையிட்டதாக அன்வாரைப் பிரதிநிதித்த வழக்குரைஞர் லத்தீப்பா கோயா கூறினார்.

அந்த செலவுத் தொகையையும் இழப்பீடுகளையும் பின்னர் நீதிமன்ற முதுநிலை உதவிப் பதிவாளர் மதிப்பீடு செய்வார்.

அன்வாருக்கு எதிராக தாம் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் மீது கூடுதலான சிறந்த விவரங்களை நல்லகருப்பன் வழங்கத் தவறி விட்ட காரணங்கள் அடிப்படையில் நல்லகருப்பனுடைய வாதத்தை தள்ளுபடி செய்யுமாறு அன்வார் விண்ணப்பம் செய்து கொண்டிருந்தார்.

அந்த நீதிமன்ற முடிவை எதிர்த்து நல்லகருப்பனுடைய வழக்குரைஞர் முகமட் ஷாபி அப்துல்லா விண்ணப்பித்துக் கொள்வார் என்றும் முடிவை நிறுத்தி வைப்பதற்கு முறையாக விண்ணப்பிக்குமாறு நீதிபதி அவருக்கு ஆணையிட்டார் என்றும் லத்தீப்பா தெரிவித்தார்.

2008 ஆகஸ்ட் மாதம் மிங்குவான் மலேசியா, சினார் ஹரியான், ஆகிய நாளேடுகளில் வெளியான ‘Anwar terima RM60 juta’ ( அன்வார் 60 மில்லியன் ரிங்கிட்டைப் பெறுகிறார் ) என்னும் தலைப்பைக் கொண்ட கட்டுரையில் நல்லகருப்பன் அவதூறானவை எனக் கூறப்படும் கருத்துக்களை வெளியிட்டது மீது 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி அன்வார் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

தீய நோக்கம் ஏதும் இல்லை என்றும் அந்த அறிக்கைகள் தகுதி பெற்ற சலுகைகளின் கீழ் விடுக்கப்பட்டன என்றும் நல்லகருப்பன் தமது வாதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பெர்னாமா